வருண் சக்கரவர்த்தியை ரூ.8 கோடிக்கு வாங்கியது ஏன்? ப்ரீத்தி ஜிந்தா அதிரடி விளக்கம்..!


தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8 கோடிக்கு வாங்கியதற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்து உள்ளார்.

ஜெய்ப்பூரில் கடந்த 18-ம் தேதி 12-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடந்தது. அதிகபட்சமாக, தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் வருண் சக்கரவர்த்தியை ரூ. 8.40 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அறிமுக தொடரிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது 13 வயதில் இருந்து கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டு இருந்தார். 2017-18-ல் நடந்த சென்னை லீக் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், விஜய் ஹசாரே தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அத்துடன், டி.என்.பி.எல் தொடரின் கடந்த சீசனில் மதுரை அணிக்காக விளையாடினார்.

கடந்த ஐ.பி.எல் தொடரின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு வலைப்பயிற்சியின்போது வருண் பந்து வீசியுள்ளார். அவரின் பந்துவீச்சு அனைவரையும் ஈர்த்து உள்ளது. பின்னர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வலைப்பயிற்சியில் பந்து வீசியுள்ளார்.

அதிக விலைக்கு வருண் வாங்கப்பட்டது பற்றி பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், “வருண், வித்தியாசமான முறையில் பந்துவீசும் திறமை கொண்டவர். அவரின் வருகை அணிக்கு கூடுதல் பலம். பஞ்சாப் அணி எப்போதும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும். வருண் எங்களுக்கு ஒரு நீண்ட கால முதலீடு” என்று தெரிவித்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி, சாதாரண சுழற்பந்து வீச்சாளர்கள்போல் ஒரு சில ஸ்டைலில் இல்லாமல், ஆஃப் ப்ரேக், லெக் ப்ரேக், கூக்ளி, கேரம் பால் உள்ளிட்ட 7 விதமாக பந்துவீசக் கூடியவர்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!