புதுப்பெண் கற்பழித்து கொலையானது அம்பலம் – சிறுவன் பகீர் வாக்குமூலம்..!


புதுவை குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வந்த பெண்ணுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி பூட்டிய வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அந்த பெண் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

புதுவையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உருளையன்பேட்டை போலீசார் சாதாரண பிரிவில் அதாவது தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

புதுப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். கொலையாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் உத்தரவின்படி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், முத்துக்குமார், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை விடுவித்தனர்.

இருந்தபோதிலும் அந்த பெண்ணின் பக்கத்து வீடுகளையும், அங்கு வசிப்பவர்களையும் போலீசார் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அவனது குடும்பத்தினரின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. புதுப்பெண்ணின் குடும்பத்துக்கும், அந்த சிறுவனின் குடும்பத்துக்கும் ஏற்கனவே தகராறு இருந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் கண்காணிப்பு கேமராவில் அந்த சிறுவனை போன்ற உருவம் பதிவாகி இருந்தது. இதை வைத்து முதலில் அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுவன் புதுப்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

அதாவது பக்கத்து வீட்டை சேர்ந்த அந்த சிறுவன் தனது வீட்டில் புறா வளர்த்து வந்துள்ளான். அந்த புறாக்கள் அடிக்கடி புதுப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அசுத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த சிறுவனின் தந்தை மகனை கண்டித்து புறாக்களை துரத்திவிட்டாராம். ஆனாலும் அந்த சிறுவன் மீண்டும் புறாக்களை வளர்த்து வந்துள்ளான். அந்த புறாக்கள் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளன. அதை பிடித்துவர அந்த சிறுவன் சென்றுள்ளான்.

அதைப்பார்த்த புதுப்பெண் சிறுவனை திட்டியுள்ளார். பதிலுக்கு அந்த சிறுவனும் அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் செங்கல்லை எடுத்து தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்து புதுப்பெண் மயங்கி விழுந்துள்ளார். ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்த அவரை அந்த சிறுவன் கற்பழித்து உள்ளான்.

மயக்கம் தெளிந்து எழுந்து விட்டால் நடந்த சம்பவங்களை வெளியில் சொல்லி விடுவார் என்று பயந்த அந்த சிறுவன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து அந்த பெண்ணை முகத்திலும் வயிற்றிலும் சரமாரியாக குத்தியுள்ளான். இதன்பின் ரத்த வெள்ளத்தில் அந்த பெண்ணை போட்டு விட்டு தப்பிச் சென்று இருக்கிறான்.

அங்கிருந்து செல்லும் போது வீட்டை பூட்டி சாவியையும், பெண்ணின் செல்போனையும் அந்த சிறுவன் எடுத்துச் சென்றுள்ளான். அருகில் இருந்த சாக்கடையில் அவற்றை வீசிவிட்டு வீட்டுக்கு சென்றான். அதன்பின் எதுவுமே தெரியாதது போல் இருந்துள்ளான். இதற்கிடையே வழக்கின் விசாரணை வேறு பக்கமாக சென்றதால் தப்பித்து விட்டதாக கருதினான்.

பூட்டிய வீட்டுக்குள் புதுப்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் கொலை சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த உருவத்தை வைத்து சிறுவனையும், அவனது குடும்பத்தினரையும் ரகசியமாக கண்காணித்தனர்.

இதில் அவர்களது நடவடிக்கையில் மாற்றம் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் மறுத்த அவன் அதன்பின் புதுப்பெண்ணை தாக்கி கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த சிறுவன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் பாராட்டினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!