பம்பையில் பதற்றம்: சென்னை பெண்கள் சபரிமலை செல்லும் வழியில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் காலம் காலமாக இந்த ஆச்சாரம் அங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இளம்பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் கேரள மாநில அரசு மேற்கொண்டது.

ஆனால் சபரிமலையில் ஆச்சாரங்களை மீறி இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற இளம்பெண்களை அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். அவர்களை சாமி தரிசனம் செய்யவிடாமல் விரட்டி அடித்தனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் சபரிமலை போர்க்களம்போல மாறியது. அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையே நிலவுகிறது.

சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி அங்கு பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு சில நாட்களே உள்ளதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

அதே சமயம் கூட்டத்தை பயன்படுத்தி இளம் பெண்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய வரக்கூடாது என்பதற்காக அய்யப்ப பக்தர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக சபரிமலையில் கடந்த 16-ந்தேதி முதல் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த தடை உத்தரவு வருகிற 27-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக அறிவித்தனர்.

தங்கள் குழுவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 பேர் இடம் பெறுவார்கள் என்று கூறினார்கள். அவர்கள் தாங்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு இ-மெயில் மூலம் கடிதமும் அனுப்பினார்கள்.

அந்த கடிதத்தை போலீஸ் டி.ஜி.பி.க்கு முதல்வர் அலுவலகம் அனுப்பியதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் சென்னை இளம்பெண்கள் சபரிமலை வர அய்யப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சபரிமலை வந்தால் தடுத்து நிறுத்துவோம் என்று அறிவித்ததால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில் திட்டமிட்டப்படி மனிதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 11 இளம்பெண்கள், ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் சென்னையில் இருந்து வேன் மூலம் சபரிமலை நோக்கி புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த அய்யப்ப பக்தர்களும் ஆங்காங்கே திரண்டனர். வழியில் மதுரை மேலூர் உள்பட பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை பெண் பக்தர்கள் கம்பமேடு, முண்டகயம் வழியாக பம்பைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைந்தனர்.

பம்பை சென்றதும் சென்னை பெண் பக்தர்கள் 11 பேரும் வேனில் இருந்து இறங்கினார்கள். அங்கு தயாராக இருந்த போலீசாரும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அந்த பெண் பக்தர்கள் அங்கிருந்த குருசாமிகளிடம் தங்களுக்கு இருமுடி கட்டும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆனால் யாரும் அவர்களுக்கு இருமுடி கட்டவில்லை. அய்யப்ப பக்தர்களும் சென்னை இளம்பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழுவில் உள்ள 6 பெண்கள் தாங்களாகவே இருமுடி கட்டி கொண்டனர்.

அனைவரும் கருப்பு சேலை அணிந்தபடி சுவாமியே சரணம் அய்யப்பா… என்று கோ‌ஷம் எழுப்பியபடி, பெருவழி பாதையாக சபரிமலை சன்னிதானம் நோக்கி நடக்க தொடங்கினர். 5 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் சென்றதும் அதற்கு மேல் அவர்கள் முன்னேறி செல்ல விடாமல் அய்யப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் சென்னை பெண் பக்தர்கள் 11 பேரும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தரையில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு சிறிது தூரத்தில் அய்யப்ப பக்தர்களும் தரையில் அமர்ந்து நாம ஜெப கோ‌ஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போலீசாரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பாக சூழ்ந்து நின்று கொண்டனர். மேலும் பக்தர்கள் போராட்டம் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதாக போலீசார் கூறினர். ஆனால் சென்னை பெண் பக்தர்கள் தாங்கள் சபரிமலை செல்வதில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தனர்.

அவர்கள் கூறுகையில், எங்கள் குழுவைச் சேர்ந்த மேலும் பல பெண்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் இன்று மதியத்திற்குள் பம்பை வந்து விடுவார்கள் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதுபற்றி பத்தினம் திட்டா போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், சென்னை பெண் பக்தர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்குவார்கள் என்றார். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.