உயரமான ஆஸ்திரேலியா மலையில் ஏறி, 8 வயது சிறுவன் சாதனை!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த சிறுவன் சமன்யு பொத்துராஜ் (வயது 8). இந்த சிறிய வயதில் சத்தமில்லாமல் சமன்யு சாதனை படைத்துள்ளான்.

கடந்த 12ந்தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயர்ந்த மலையான கோஸ்சியஸ்கோ என்ற மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான். தனது அம்மா லாவண்யா மற்றும் சகோதரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்றுள்ளனர்.

இதுபற்றி கூறிய சமன்யு, நான் இதுவரை 4 மலைகளில் ஏறியுள்ளேன். ஜப்பானில் உள்ள புஜி மலையில் அடுத்து ஏற உள்ளேன். வருங்காலத்தில் வளர்ந்த பின்னர் விமான படை அதிகாரியாக வர விரும்புகிறேன் என கூறியுள்ளான்.

கடந்த ஏப்ரல் 2ந்தேதி ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்ஜாரோ மலையில் உள்ள உகுரு சிகரத்தில் ஏறி சாதனை படைத்தான். சமன்யுவுடன் அவனது அம்மா, பயிற்சியாளர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5,895 மீட்டர் உயரம் கொண்ட இங்கு இந்திய மூவர்ண கொடியை பறக்க விட்டான்.

சமன்யுவின் அம்மா லாவண்யா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு முறை மலை ஏறும்பொழுதும் ஏதேனும் ஒரு நோக்கத்தோடு செல்வோம். அந்த நோக்கம் இன்றி நாங்கள் செல்வது இல்லை. இந்த முறை நாங்கள் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்துடன் மலை ஏறினோம் என கூறியுள்ளார். – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.