சத்தீஸ்கரில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்..!


தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கினர்.

குறிப்பாக 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல காங்கிரசுக்கு இணையாக பாஜகவும் முன்னேறியது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 102 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த நிலவரத்தில் அடுத்தடுத்து மாற்றம் ஏற்படுவதால், இழுபறி நீடிக்கிறது.

இதேபோல் ராஜஸ்தானிலும் இழுபறியே நீடிக்கிறது. ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரை (100) எந்த கட்சியும் நெருங்கவில்லை. காங்கிரஸ் 94 இடங்களிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!