தமிழிசைக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின் – இப்படி ஒரு பதிலா..?


பாஜக குறித்த தமிழிசையின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.,

“கஜா புயலால் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகதாது அணை குறித்த பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. தற்போதைய போராட்டம் உழவர்களின் கண்ணீரை துடைக்க நடைபெறுகிறது; அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ அல்ல.


மேகதாதுவில் அணைகட்ட அனுமதியளித்த மத்திய பாஜக அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

குட்டிகரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்? என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை.,

“இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும், குளம் நிறையும், தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழிசையின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.,

சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல். தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்! என்று குறிப்பிட்டுள்ளார்.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!