ஆசை மகளுக்கு கொடுத்த அந்த முத்தம் – இன்டர்நெட்டில் கண்டனத்திற்கு ஆளான பிரபலம்!


மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று…” தங்க மீன்கள் திரைப்படத்தில் இயக்குனர் ராம் எழுதிய அற்புதமான வசனம் இது. முத்தம் எப்படி காமத்தில் சேர்ந்தது என்பது ஒரு வினா? அதற்கான பதில் யாராலும் கூற இயலாது.

எப்போது லிப்லாக் கலாச்சாரம் வந்ததோ, அதன் பிறகு தான் முத்தம் காமத்தில் சேர்ந்ததோ என்ற கேள்வி எழுகிறது. இருக்கலாம்! அதற்கும் வாய்ப்புகள் உண்டு. முத்தம் என்பது காதலன், காதலி ; கணவன், மனைவி என்பதை தாண்டி அனைத்து உறவுகளுக்கும் சொந்தமான ஒரு பாசப்பகிர்வு.

கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் தவிர்த்து பாசத்தை வேறு எப்படி அதிகம் காண்பித்துவிட முடியும். இன்றும், பெண்ணும், பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டால் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அதுவே, ஒரு ஆணும், ஆணும் முத்தமிட்டுக் கொண்டால், அவனா நீ என்று கேலி செய்வார்கள்.

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்கம் தன் மகளுக்கு கொடுத்த முத்தம் இன்டர்நெட்டில் மிக வைரலாகி, ஒரு விவாத பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், நல்லவேளையாக மகள்களை பெற்ற நல்லுள்ளம் கொண்ட பெற்றோர் டேவிட் பெக்கமிற்கு ஆதரவு கரம் நீட்ட துவங்கினார்கள்.

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்தவர் டேவிட் பெக்கம். இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் கடந்து போனாலும், மறக்க முடியாத வீரர்களில் இவரும் ஒருவர். இவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தையாவார்.

தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் சமீபத்தில் டேவிட் பெக்கம் தன் மகளுக்கு இதழ் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். அதில் கிறிஸ்துமஸ் வர இருக்கிறது, வா ஸ்கேடிங் செய்யலாம் என்று பதிவிட்டிருந்தார்.

வெறும் ஏழு வயதே நிரம்பிய தன் ஆசை மகளுக்கு கொடுத்த அந்த முத்தம் தான் இன்டர்நெட்டில் வைரலாக துவங்கியது.


அந்த படத்திற்கு கீழ் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்ய துவங்கினார்கள்.

“யார் என்ன கூறினாலும் எனக்கு கவலை இல்லை. ஒரு தந்தை, குழந்தைக்கு இதழ் முத்தம் அளிப்பது முற்றிலும் தவறான காரியம்.”

“இதழுக்கு பதிலாக கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கலாம். இதழில் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது.”

இப்படி பல கருத்துக்கள் டேவிட் பெக்கமின் படத்திற்கு கீழே வரத் துவங்கியது. அதே சமயத்தில் டேவிட் பெக்கமிற்கு ஆதரவாக பல பெற்றோர்கள் கமென்ட் செய்ய ஆரம்பித்தனர்.

இதில் என்ன தவறு இருக்கிறது. நான் எப்போதுமே என் குழந்தைக்கு இதழில் முத்தம் இடுவேன். நான் மட்டுமல்ல, என் பெற்றோரும் எனக்கு இதழில் முத்தம் கொடுத்திருக்கின்றனர். இது இயற்கை. இது ஒன்றும் தவறில்லை என்று டேவிட் பெக்கமின் தோழி ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

அது மட்டுமின்றி, பல அப்பாக்கள், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதழ் முத்தமிட்ட படங்கள் மற்றும் இதற்காக இதழ் முத்தமிட்டு எடுத்த படங்களை பகிர துவங்கினார்கள். பலரும் முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. டேவிட் பெக்கம் கொடுத்த முத்தம் ஒன்றும் இச்சை வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்று கூறி ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதற்கு முன் பல பிரபலங்கள் தங்கள் குழந்தைக்கு இதழ் முத்தமிட்டு, அதற்கு அவர்களது ரசிகர்களே கமெண்டில் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுகள் நடந்ந்துள்ளன.

ஆனால், இம்முறை பெற்றோர்கள் முன்வந்து, இதில் தவறில்லை… இது அன்பின் வெளிப்பாடு மட்டுமே என்று கூறி டேவிட் பெக்கமிற்கு ஆதரவு அளித்தது கண்டனங்கள் காட்டுத்தீயாக பரவுவதற்கு முன், அன்பும், பாசமும் முத்தப்படங்களாக பரவ வித்திட்டது.-source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!