சொத்துக்காகத்தான் திருமணம்.. என்னை யாரும் கடத்தவில்லை – காடுவெட்டி குரு மனைவி பேட்டி..!


பா.ம.க.வின் ஆணிவேர் என்று கருதப்படுவது வன்னியர் சங்கம். இதன் தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. பா.ம.க.வினராலும் வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் மறைந்தார்.

அதன் பிறகு, ‘காடுவெட்டி குரு மறைந்த நிலையில் வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே காடுவெட்டி குரு பயன்படுத்திய வாகனத்தை விற்க இருக்கிறோம். வாங்க விரும்புகிறவர்கள் அணுகவும்’ என்று காடுவெட்டி குருவின் அக்காள் மகன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரம், பா.ம.க. தரப்பில் இருந்து காடுவெட்டி குரு குடும்பத்துக்கு உதவப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மனைவி (சொர்ண)லதா ஒரு கடிதம் எழுதியதாக முகநூலில் சிலரால் பதிவிடப்பட்டது. அதில், ‘என் கணவர் காடுவெட்டி குரு மறைந்த பிறகு, திக்குதிசை தெரியாமல் தவிக்கிறேன். என் மகள் விருதாம்பிகை, மகன் கனலரசன் ஆகியோரைக்கூட பார்க்கமுடியவில்லை. எங்களது சொத்துக்காக எங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. அய்யா (பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்)தான் எங்களுக்கு நல்லவழி காட்டவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், தனது தாயாரை பல நாட்களாக காணவில்லை என்றும். அவரது உறவினர்கள் அவரை பலவந்தமாக எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவரை மீட்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் சுவாமிமலையில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

திருமண விழாவில் மணமகன் மனோஜ் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். மணமகள் விருதாம்பிகாவின் தாயார் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரது மகனும் மணமகள் விருதாம்பிகாவின் தம்பியுமான கனலரசன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகைக்கும், மணமகன் மனோஜூக்கும் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து மணமகன் மனோஜ், ‘எங்கள் மாமா காடுவெட்டி குருவின் தாயாரும் எங்கள் பாட்டியுமான கல்யாணியம்மாள் காடுவெட்டியில் இருக்கிறார். முதுமை காரணமாக அவர் எங்களது திருமண நிகழ்வில் கலந்துகொள்ளமுடியவில்லை.

திருமணம் முடிந்ததும் அவரிடம் ஆசீர்வாதம் பெறவும், காடுவெட்டியில் இருக்கும் குரு மாமாவின் நினைவிடத்தில் வழிபடவும் திட்டமிட்டோம். அதற்காக காடுவெட்டிக்கு புறப்பட்டோம்.

இந்த நிலையில், காடுவெட்டியில் இருந்து ஒரு தகவல் வந்தது. அங்கே தனியாக இருக்கும் எங்கள் பாட்டி கல்யாணியம்மாளிடம் சிலர் வந்து மிரட்டியிருக்கிறார்கள்.

‘எங்களைக் கேட்காமல் எப்படி திருமணம் செய்தீர்கள்? மணமக்கள் காடுவெட்டி ஊருக்குள் கால் வைக்கக்கூடாது. அப்படி வந்தால் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது’ என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்துபோய், எங்களை காடுவெட்டிக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.

இப்படி மிரட்டுபவர்கள் தானாக மிரட்ட வாய்ப்பே இல்லை. இவர்கள் பின்னணியில் யாரோ இருந்து இயக்குகிறார்கள்’ என்று நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மணமகள் – மணமகன் ஆகயோர் கும்பகோணம் அனைத்து மகளிர் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். தங்களது உயிருக்கு சிலர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குருவின் சகோதரி மீனாட்சி, ‘இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று என் அப்பா காடுவெட்டி குரு விரும்பினார். அவரது ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆனால் இப்போது, யாரை கேட்டு திருமணம் செய்து வைத்தீர்கள் என காடுவெட்டியிலுள்ள சிலர், எங்களை ஊருக்குள் நுழைய கூடாது என்றும், வந்தால் விரட்டியடிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.

எங்களது வீட்டில் வேலை செய்தவர்களை விரட்டிவிட்டு, வீட்டை அபகரித்துள்ளனர். எங்களுக்காக யாரும் உதவ முன்வரவில்லை. எங்களிடமிருந்த வயல்களையும், சொத்துக்களையும் ஏற்கனவே பறித்துக்கொண்டனர். காடுவெட்டி குரு பாமக வன்னியர் சங்கத்தில் இருந்தபோது பலருக்கு ஏராளமான உதவிகளை செய்தார். ஆனால் கட்சியிலிருந்தோ, வன்னியர் சங்கத்திலிருந்தோ எந்தவித உதவிகளும், பாதுகாப்பும் தரவில்லை. ஆகவே எங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம்’ என்று மீனாட்சி கூறினார்.


இந்த நிலையில் கடத்தி வைக்கப்பட்டுள்ளார் என்று புகார் கூறப்பட்ட காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இன்று காடுவெட்டி கிராமத்துக்கு வந்தார். அவரது வருகையை அறிந்த செய்தியாளர்கள் அங்கு கூடினர். அவர்களிடம் பேசிய சொர்ணலதா, ‘உடல் நலம் இல்லாமல் சென்னையில் உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன். கால்வேறு உடைந்துவிட்டது. திருமணம் குறித்த எனக்கு எந்வதவித தகவலும் கூறவில்லை.

இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. சொத்துக்காகத்தான் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். சொத்துக்கள் என் மகன் பெயரில்தான் இருக்க வேண்டும்.

அந்த கூட்டமே சொத்துக்காக அலைகிறது. என் பெண்ணை நன்றாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். இப்போது ஊர்க்காரர்கள் பாதுகாப்பில் இருக்கிறேன்.

நான் கடத்தப்பட்டதாக என் மகன் கூறியது தவறு. அவன் சிறு குழந்தை அவனுக்கு எதுவும் தெரியாது. டாக்டர் ராமதாஸ் எங்கள் குடும்பத்துக்கு உதவவில்லை என்று கூறுவது தவறு. அவர் நிறைய உதவியிருக்கிறார்’ என்று கூறினார்.

காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பிறகு அவரது குடும்பத்தில் பல்வேறு அதிர்ச்சகர சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.-source: patrikai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!