சீரடியில் சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கண்டோபா ஆலயம்..!


துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்றதுண்டு. சாவடி ஊர்வலம் நடைபெறும் போது ஆஞ்சநேயர் கோவில் எதிரில் வந்ததும் பாபா சிறிது நேரம் நின்று, கையை மேலும் கீழும் அசைத்தபடி ஏதோ மந்திரங்கள் சொல்வார். அது யாருக்கும் புரியாது. பாபா மகாசமாதி அடைந்த பிறகு இந்த ஆலயமும் புதுப்பிக்கப்பட்டது. பாபா சென்ற ஆலயம் என்பதால் பக்தர்களும் தவறாமல் சென்று வழிபடுகிறார்கள்.

கண்டோபா ஆலயம் இப்போது சீரடி நகருக்குள் இருக்கிறது. ஆனால் பாபா சீரடிக்கு வந்தபோது அந்த ஊர் சாதாரணமாக இருந்தது. கண்டோபா ஆலயம் ஊர் எல்லையில் இருந்தது. அந்த ஆலய கருவறையில் சிவனின் அம்சமாக கண்டோபா உள்ளார். பாபாவுக்கு மிகவும் பிடித்த இடமாக கண்டோபா ஆலயம் திகழ்ந்தது.

பாபா மீண்டும் சீரடிக்கு வந்தபோது கண்டோபா ஆலய பூசாரி மகல்சாபதி சாய் என்றழைத்தார். அன்று முதல் பாபா பெயர் சாய்பாபா ஆனது. இத்தகைய மகத்துவம் நிகழ்ந்த இடம் இது. அதனால்தானோ என்னவோ பாபா, கண்டோபா ஆலயத்தில் நிரந்தரமாக குடியேறிவிட மிகவும் ஆசைப்பட்டார்.


ஆனால் ஆலய பூசாரியாக இருந்த மகல்சாபதியோ, பாபாவை கண்டோபா கோவில் உள்ளேயே விடவில்லை விரட்டி விட்டார். இதனால்தான் பாபா… சீரடி ஊருக்குள் வந்து வேப்ப மரத்தடியில் அமர்ந்தார். கண்டோபா ஆலயத்துக்கு பாபா வந்து சென்றதன் நினைவாக அவரது பாதுகையை அங்கு நிறுவி வழிபட்டு வருகிறார்கள்.

இந்த ஆலயத்தில் கண்டோபா கடவுள் சிலைதவிர மகல் சாபதியின் சிலையும் உள்ளது. மகல்சாபதியின் வாரிசை சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தை பராமரித்து பூஜித்து வருகிறார்கள். சீரடிக்கு வரும் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் அதிக அளவில் இந்த ஆலயப் பகுதியில் தான் கட்டப்பட்டுள்ளன. எனவே சீரடி செல்லும் பக்தர்கள் மிக எளிதாக கண்டோபா ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.-SOURCE : dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!