ஓகி புயலை தொடர்ந்து சென்னையை தாக்க வருகிறது புதிய புயல்..!! பதற்றத்தில் மக்கள்..!


தமிழ்நாட்டுக்கு அதிக மழையைப் பெற்றுத்தரும் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அக்டோபர் 27-ந்தேதிதான் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது.

அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை சராசரி அளவை (44 செ.மீ.) விட மிகவும் குறைவாகவே பெய்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு அதிக மழை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். அதை உறுதிப்படுத்துவது போல வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்தமும், மேலடுக்கு சுழற்சிகளும் உருவாகி மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய அக்டோபர் இறுதியில் வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஓரளவு மழை பெய்தது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கன மழை பெய்தது. ஆனால் தென் மாவட்டங்களில் போதிய மழை இல்லை என்ற நிலை இருந்தது.

அதை நிவர்த்தி செய்யும் வகையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று குமரி அருகே ஒக்கி புயலாக மாறி கடந்த இரு நாட்களாக தென் மாவட்டங்களில் மிக அதிக மழையை கொடுத்தது. தென் மாவட்டங்களை அந்த மழை புரட்டி போட்டுள்ளது.


இந்த நிலையில் வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகி வருகிறது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. நேற்று மாலை அது காற்றழுத்த பகுதியாக மாறி வலுப்பெற்றுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) அந்த குறைந்த காற்றழுத்தம் புயல் சின்னமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இன்று பகலில் அந்த புதிய புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் 2 தினங்களும் வங்கக் கடலின் சூழலைப் பொறுத்து அந்த புயல் சின்னம் மேலும் வலுப்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அது தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் திங்கட்கிழமைக்கு பிறகு சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புயல் சின்னத்தின் தாக்கம் காரணமாக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் வரும் நாட்களில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்றும் நாளையும் ஆழ்கடல் பகுதிக்கு தமிழக மீனவர்கள் புறப்பட்டு செல்ல வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

Source: maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!