நவீன கருவிகள் மூலம் சென்னை ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளை -கொள்ளையர்கள் பகீர் வாக்குமுலம்..!


சென்னையில் நவீன கருவிகள் உதவியுடன் போலி கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் பணத்தை கொள்ளையடித்தோம். ருமேனியாவில் இருந்து மீண்டும் கொள்ளையடிக்க சென்னை வந்தபோது போலீசில் சிக்கிக்கொண்டோம் என கைதான வெளிநாட்டு கொள்ளையர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் ஏ.டி.எம். அருகே நின்ற ருமேனியா நாட்டை சேர்ந்த நிகோலாய் கியம்லிசி (வயது 35), செர்சி ஜார்ஜ் (36) ஆகியோரை மடிப்பாக்கம் போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

வெளிநாட்டு ஏ.டி.எம். கொள்ளையர்களான 2 பேரும் ஏற்கனவே பெருங்குடியில் கொள்ளையடித்து விட்டு ருமேனியா சென்று உள்ளனர். சென்னை ஏ.டி.எம்.களில் கொள்ளையடிப்பதற்காக தற்போது மீண்டும் ருமேனியாவில் இருந்து சென்னை வந்து உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கைதான ருமேனியா நாட்டை சேர்ந்த 2 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 3 நாட்களுக்கு முன் ருமேனியாவில் இருந்து விமானம் மூலமாக நாங்கள் சென்னை வந்தோம். துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளோம். சென்னையில் உள்ள பெருங்குடி போன்ற பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நவீன கருவிகள் உதவியுடன் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தோம். மடிப்பாக்கத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டோம். ஆனால் எங்களது நடமாட்டத்தை கண்ட மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசில் பிடிப்பட்டோம்.

போலீசாரிடம் மட்டும் பிடிபடாவிட்டால் போலியான ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பெருந்தொகையை கொள்ளையடித்துவிட்டு ஒரு வாரத்தில் ருமேனியா நாட்டிற்கு தப்பி சென்று இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கைதான இவர்களிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட போலி வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்களது கூட்டாளிகள் சென்னையில் இதுபோன்ற நூதன முறையில் கொள்ளையடித்து சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!