கஜா புயல் தாக்கம் – மூக்கில் ரத்தம் வடிந்து மாரடைப்பால் பரிதாபமாக இறந்த மான்கள்..!!


கஜா புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு வனவிலங்குகள் பலவும் கொத்துக்கொத்தாக, செத்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான, கஜா புயல் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, பாம்பன் மற்றும் கடலூர் நடுவே நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

புயல் கரையை கடந்த போது, அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. புயல் மிக மெதுவாக நகர்ந்து சென்றதன் காரணமாக, காற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பல ஆயிரம் மரங்கள் வேரோடு விழுந்துள்ளன.

இந்த புயலில் 37க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், புயலுக்கு வன விலங்குகளும் கூட தப்பவில்லை. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மான்கள், காட்டுப் பன்றிகள், காட்டு குதிரைகள் செத்து கிடக்கும் காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.


நாகை மாவட்டம் கோடியக்கரை வன பகுதியில் இருந்து இந்த வன விலங்குகள் அடித்து வரப்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. புள்ளி மான்கள், கலை மான்கள் இறந்துள்ளன. நரிகளும் இறந்துள்ளன.

அழுகிய நிலையில் உள்ள விலங்குகளின் உடல்களை உடனடியாக சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மான்கள் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் உள்ளன. ஏன் இவ்வாறு நடந்துள்ளது என்பது குறித்து வனத்துறை மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, 100 கி.மீ வேகத்திற்கும் மேலாக காற்று வீசியதால், அச்சத்தால் மான்கள் தொடர்ந்து ஓடியபடியே இருந்திருக்கும். அச்சம் மற்றும் தொடர் ஓட்டம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டதால்தான் மான்கள் இறந்திருக்கும் என்று தெரிவிக்கிறார்கள். காட்டுக் குதிரைகளை பொறுத்தளவில், ஆங்கிலேயர் காலத்தில் இங்கே விட்டுச் சென்ற அரிய ஒரு உயிரினமாகும். அவையும், புயலில் சிக்கி இறந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.