‘திமிரு பிடித்தவன்’ பட கதை என்னுடையது.. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் பரபரப்பு புகார்..!!


பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், ‘ஒன்இந்தியாதமிழ்’ இணையதளத்தில் எழுதிய ‘ஒன் + ஒன் = ஜீரோ’ தொடரின் கதைக்கருவை கொண்டு ‘திமிரு பிடித்தவன்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் சினிமா பிரபலங்கள் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் கதைக் கரு, வருண் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்றும், செங்கோல் என்ற பெயரில் அவர் பதிவு செய்து வைத்த கதைக் கருதான் சர்கார் திரைப்படத்தின் கதைக் கரு என்றும் சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றது. இறுதியில், கதைக் கரு, ஒரே மாதிரி இருப்பதை முருகதாஸ் ஒப்புக்கொண்டு, சர்கார் திரைப்படத்தின் ஆரம்பத்தில், வருண் ராஜேந்திரனின் பெயரை திரைப்படத்தில் இடம்பெறச் செய்தார்.

இந்த சர்ச்சை ஓயும் முன்பாக, பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார், தான் எழுதிய கதை கருவை காப்பியடித்து, ‘திமிரு பிடித்தவன்’ என்ற படமாக எடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதுபற்றி, பேஸ்புக் பதிவில் ராஜேஷ்குமார் கூறியுள்ளதாவது:

“இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

சென்ற வருடம் நான் oneindia வில் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து ‘திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?” இவ்வாறு ராஜேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பின்னூட்டம் ஒன்றுக்கு பதிலளிக்கையில், “நடவடிக்கையில் இறங்கிவிட்டேன்” என்று ராஜேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கியது கணேசா என்பது குறிப்பிடத்தக்கது.source-oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.