கண்ணை மூடிக்கொள் தோஷம் கழிக்கப்போறேன் – பெண் கழுத்தை அறுத்துக் கொன்ற சாமியார் கைது..!


தோஷம் கழிப்பதாகச் சொல்லி பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த போலிச் சாமியாரை அதிரடியாக கைது செய்திருக்கிறது போலீஸ்.

புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27). 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஜெயஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும், ஜெயகணேஷ் (2) என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது. கடந்த 19-ம் தேதி மாலை கோயிலுக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. வெகுநேரமாகியும் கிருஷ்ணவேணி வீடு திரும்பாததால் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் தேடத் தொடங்கினர். அப்போது கரிக்கலாம்பாக்கம்-பாகூர் சாலையில் உள்ள ஒரு காளி கோயிலுக்கு அருகில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சேலையால் கைகள் கட்டப்பட்டு சடலமாகக் கவிழ்ந்து கிடந்தார் கிருஷ்ணவேணி.

அவரின் கணவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். கிருஷ்ணவேணிக்கு அருகில் எலுமிச்சைபழம், குங்குமம் போன்றவை கிடந்தன. சிவப்பு நிற சேலை அணிந்திருந்த கிருஷ்ணவேணி பூ வைத்து மங்களகரமாக விழுந்து கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த செயின், காதில் இருந்த கம்மல் போன்றவை திருடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தகராறு நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் நரபலியாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீஸ், அதன்பிறகு சம்பவத்தை முதலில் தெரிவித்த கிருஷ்ணவேணியின் கணவரிடம் விசாரணை நடத்தியது. அவர் கொடுத்த தகவலில் அடிப்படையில் பக்கத்து வீட்டுக்காரரான போலிச் சாமியார் கோவிந்தராஜை கைது செய்தது போலீஸ்.

அசோக்கின் தங்கைக்கு நீண்ட நாள்களாக திருமணம் ஆகாமல் இருந்திருக்கிறது. தோஷம் கழித்தால் அவருக்கு உடனே திருமணம் நடந்துவிடும் என்று அவர்களிடம் சொன்ன போலிச் சாமியார் கோவிந்தராஜ், அவர்கள் குடும்பத்தினரை வேட்டவலத்தில் உள்ள ஐயனார் கோயிலுக்கு அழைத்து தோஷம் கழிப்பதாக சில சடங்குகளைச் செய்திருக்கிறார். சில மாதங்களில் திருமணம் நடந்துவிடவே கோவிந்தராஜை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினர் அசோக்கின் குடும்பத்தினர். அதையடுத்து அசோக் வீட்டில் பில்லி, சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றைப் புதைத்துப் பின் எடுத்தும் இருக்கிறான். இப்படியான சம்பவங்களால் அசோக் குடும்பத்தினர் அனைவரும் கோவிந்தராஜ் எதைச் சொன்னாலும் கேட்க ஆரம்பத்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கோவிந்தராஜ் வீட்டில் 5 பவுன் தங்கச் செயில் இருப்பது கோவிந்தராஜுக்கு தெரிந்ததும் அதை அபகரிக்க திட்டமிட்டான்.


அதன்படி கிருஷ்ணவேணியிடம், “உனது கணவன் உன்னை விட்டு ஓடிவிடுவான். அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு தோஷம் கழிக்க வேண்டும். வீட்டில் எதாவது புதிய நகை இருந்தால் எடுத்துவா. அதை வைத்து பூஜை செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதை நம்பிய கிருஷ்ணவேணி வீட்டில் இருந்த 5 பவுன் செயினை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு பால் ஊற்றச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். ஊருக்கு வெளியே சென்றதும் தனது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த கோவிந்தராஜ், கிருஷ்ணவேணியை ஆளில்லாத காளி கோயில் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிமென்ட் சாக்குப் பை ஒன்றைத் தரையில் விரித்து கிருஷ்ணவேணியை அதில் அமர வைத்த கோவிந்தராஜ், கைகளில் ஒரு எலும்பிச்சை பழத்தைக் கொடுத்து அவரது சேலையாலே இரு கைகளையும் கட்டியிருக்கிறான். தோஷம் கழிப்பதை யாரும் பார்க்கக் கூடாது என்று சொல்லி நம்ப வைத்தவர், கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.

கோவிந்தராஜின் உள்நோக்கத்தை அறியாத கிருஷ்ணவேணியும் தன் கணவர் தன்னை விட்டு சென்றுவிடக் கூடாது என்று கண்களை மூடி கடவுளிடம் மனம் உறுகி வேண்டினார். அப்போது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்திருக்கிறார் கோவிந்தராஜ். கழுத்து அறுபட்டதால் கத்த முடியாத கிருஷ்ணவேணி ரத்தம் பீறிட, அமர்ந்த நிலையிலேயே அப்படியே சரிந்திருக்கிறார். அதன்பின் அவர் அணிந்திருந்த தாலிச்செயின், கம்மல், எடுத்து வந்த தங்கச் செயின் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு திரும்பியிருக்கிறான் கோவிந்தராஜ். கோயிலுக்குச் சென்ற மனைவி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரைத் தேடிய கணவன் அசோக்குடன் சேர்ந்து இவனும் தேடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸில் புகார் அளிக்கலாம் என்று சொன்ன அசோக்கிடம், ஒருநாள் பார்த்துவிட்டு நாளைக்கு புகார் அளிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். போலீஸ் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இவை அனைத்தையும் தெரிவித்திருக்கிறார் போலிச் சாமியார் கோவிந்தராஜ். படுகொலை செய்யப்படும்போது கிருஷ்ணவேணி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை உணராதவரை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கோவிந்தராஜ் மாதிரியான போலிச் சாமியார்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.-source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!