பாராளுமன்றத்தில் எனக்கே அதிக பெரும்பான்மை உள்ளது – ரணில் அதிரடி…!


இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென விக்ரமசிங்கேவை நீக்கினார், சிறிசேனா. மேலும் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தை வருகிற 16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக சிறிசேனா அறிவித்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு உலக நாடுகள் கண்டனமும், கவலையும் வெளியிட்டு இருந்தன. குறிப்பாக இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்கா, அங்கு ஜனநாயக மதிப்பீடுகளை காக்குமாறு கேட்டுக்கொண்டது. இதைப்போல ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற முடக்க உத்தரவை நேற்று சிறிசேனா திரும்ப பெற்றார். அத்துடன் வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்தார். அதன்படி 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், ரனில் விக்ரமசிங்கே தனக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாகவும், தானே பிரதமராக நீடிப்பதாகவும் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரனில் விக்ரமசிங்கே இந்த பேட்டியின் போது மேலும் கூறும் போது, “இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்தான் பிரதமராக இருக்க முடியும்.

அப்படிப்பார்த்தால் நான்தான் இலங்கையின் பிரதமர். நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக பெரும்பான்மை நிரூபிக்கப்படாத வரை நான்தான் பிரதமராக இருக்க முடியும்.இலங்கையை பொறுத்தவரைக்கும் தற்போது அரசு என்று ஏதும் இல்லை. சட்டப்படி இங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை” என்றார்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!