சீரடிக்கு முதல் முறையாக செல்பவரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க!


சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். ஆலையத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். ஆலயத்துக்குள் மினி மருத்துவமனை ஒன்று உள்ளது.

அங்கு ரத்ததானம் செய்யலாம்.பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆலய வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் ஒன்றை எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள். ஆலயத்துக்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த தனி கவுண்டர் வசதி உள்ளது.

கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது.

மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம். சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்துக்கு பணம் கொடுக்கலாம்.

கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.கோவில் உள்ளே ஒரு இடத்தில் விநாயகர் மற்றும் சிவனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன.


திருப்பதி மாதிரி சீரடியிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருப்பதியில் ஜருகண்டி, ஜருகண்டி என்பார்கள். சீரடியில் பக்தர்களை சலோ, சலோ… என்று சொல்லி விரைவுபடுத்துகிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வேறு வழியின்றி பக்தர்கள் கையை பிடித்தும் இழுத்தும் விடுவார்கள். எனவே பாபாவை கண்டதும் மனம் உருக வேண்டி விடுங்கள்.

பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரக மாயியிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழன்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.

சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம். சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 நேர ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியம் தான். சீரடிக்கு வரும் பக்தர்களில் 99 சதவீதம் பேர் “சாய்நாத் மகாராஜ்க்கு ஜே” என்று சொல்லத் தவறுவது இல்லை.


எப்படி செல்வது

சீரடி கோவில் மகாரஷ்டிராவில் உள்ள அகமத்நகரில் இருக்கிறது. ஜனவரி, மார்ச், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் சீரடிக்கு செல்வது உகந்தது.

புனேவில் இருந்து சீரடி220 கீலோமீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் பூனே விமானநிலையத்தில் இருந்து சீரடிக்கு செல்ல முடியும். அதுபோல ரயிலிலும் செல்லலாம்.

மும்பையில் இருந்து250 கீலோமீட்டர் தொலைவில் உள்ளது சீரடி. நீங்கள் மும்பையிலிருந்து சீரடிக்கு செல்வதற்கு 4 மணி நேரம் மட்டுமே ஆகும் . அதுவே புனேவில் இருந்து செல்ல 5 மணி நேரம் தேவைப்படும் .

ரயில்

சீரடிக்கு நேராக எந்த ரயிலும் கிடையாது. சீரடி சாய் நகர், மன்மத், நாசிக், ஆகிய ரயில் நிலையங்களில் நீங்கள் இறங்கி, சீரடிக்கு செல்ல வேண்டும்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!