இளைஞரின் உயிரைப் பறித்த மியூசிக்லி ஆப் – நண்பர்களின் கமெண்டால் தற்கொலை..!


மியூஸிக்கலி ஆப் இல் பெண் வேடமிட்டு வீடியோ வெளியிட்ட இளைஞரை பலர் கிண்டல் செய்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள வியாசார்பாடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் (24). இவர் கடந்த 12ஆம் தேதி வியாசார்பாடி ரயில் நிலையத்தின் அருகே இருந்த தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கலையரசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர்.

கலையரசன் தற்கொலை செய்தபோது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில், அவரது செல்போன் மட்டும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கலையரசனின் பெற்றோர் பெரம்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதில் கலையரசன் மியூஸிக்கல்லி ஆப்-ல் பெண் குரல்களில் பாட்டுப்பாடியும், பெண் வேடமிட்டும் வீடியோக்களை பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

அந்த வீடியோவிற்கு பலரும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு, கிண்டல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? எனக் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். கலையரசனுடன் சேர்ந்து வீடியோ பதிவு செய்த அவரது நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தனது வீடியோவை பலரும் கிண்டல் செய்துள்ளதை, கலையரசனே மியூஸிக்கல்லி ஆப்-ல் பகிர்ந்து வருந்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரம் குடும்ப பிரச்னை காரணமாக அவர் இந்த முடிவிற்கு வந்தாரா? அல்லது ரயில் விபத்தில் அவர் இறந்துவிட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் மியூஸிக்கல்லி ஆப்-ல் பலரும் கலையரசன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோக்களை பதிவு செய்துவருகின்றனர். சிலர் அவரை கிண்டல் செய்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் மியூஸிக்கல்லியில் கலையரசன் ட்ரெண்டாகியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!