கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த மனைவி… கணவன் செய்த அதிர்ச்சிச் செயல்…!


திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40), விவசாயி. இவருக்கு கலைவாணி(31) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கலைவாணியின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. தன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி கலைவாணி வீட்டில் மர்மமான முறையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இதுகுறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் முருகனிடம் கேட்டபோது, கலைவாணி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து முருகன் மற்றும் அவருடைய உறவினர்கள் கலைவாணியின் உடலை அடக்கம் செய்வதற்காக அன்று மாலையே அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். இதற்கிடையே கலைவாணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சிலர் திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், திருப்பாலப்பந்தல் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கலைவாணியின் உடல் அடக்கம் செய்ய எடுத்து செல்லும்போது, போலீசார் வருவதை பார்த்த முருகன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் முருகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்அடிப்படையில் போலீசார், முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில் முருகன் ஆராம்பூண்டி கூட்டுரோட்டில் நிற்பதாக திருப்பாலப்பந்தல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அங்கு விரைந்து சென்று முருகனை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.


விசாரணையில் அவர் கள்ளக்காதலை கைவிட மறுத்த கலைவாணியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது மனைவிக்கும், பக்கத்து தெருவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவந்தது. இருப்பினும் நான் அதை நம்பவில்லை.

இந்நிலையில் கலைவாணி கடந்த சில மாதங்களாக என்னிடம் நெருங்கி பேசுவதை தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று நான் வீட்டிற்கு வந்தேன். அப்போது கலைவாணி, ஒருவருடன் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், மனைவியிடம் அந்த நபருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்தேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, கலைவாணியின் தலை மற்றும் நெற்றியில் அடித்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார்.

என்னை கொலை வழக்கில் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி விட்டால் எனது 3 குழந்தைகளும் அனாதையாகிவிடும் என்பதால், நான் கொலை செய்ததை மறைத்து, கலைவாணியின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.

அப்போது போலீசார் வருவதை அறிந்த நான் அங்கிருந்து தப்பிவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!