உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – சபரிமலையில் இனி பெண்களுக்கு அனுமதியாம்..!


உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் நாடே ஆவலுடன் காத்திருந்தது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை இல்லை ஏற்கன்வே சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு கூறியிருந்தாலும் கோவிலின் தேவஸ்தானம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடியது. இந்த வழக்கில் வாத, எதிர்வாதங்கள் முடிந்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

இதில் ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியாக அவர்களின் தீர்ப்புகளை வாசித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில் “ பெண்களுக்கு நீண்டகாலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள்தான். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. எனவே, அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.

மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்பும் தீபக் மிஸ்ரா தீர்ப்புடன் ஒத்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மெஜாரிட்டி தீர்ப்பாக இந்த தீர்ப்பே இறுதி தீர்ப்பானதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சபரிமலை கோவில் பல வருடங்களாக 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!