மனைவியின் கண் முன்பு கார் பட்டறை அதிபர் வெட்டிக்கொலை…. மனைவி பரபரப்பு வாக்குமூலம்..!


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 49). இவரது மனைவி உமா மகேஸ்வரி (40). இவர்களுக்கு சிவசக்திவேல் (17) என்ற மகனும், பிரியதர்ஷினி (14) என்ற மகளும் உள்ளனர்.

சிவசக்திவேல் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். பிரியதர்ஷினி நாமக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

மாதேஸ்வரன் நாமக்கல் முதலைப்பட்டி பை-பாஸ் ரோட்டில் தர்ஷினி என்ற பெயரில் கார் பட்டறை வைத்து நடத்தி வந்தார். மேலும் நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

நேற்று இரவு கார் பட்டறை திடீரென தீ பிடித்து எரிந்தது. காவலாளி இது குறித்து மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாதேஸ்வரனும், உமா மகேஸ்வரியும் காரில் விரைந்து வந்து, பட்டறையில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் இருவரும் அதே காரில் திரும்பி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலை 2.30 மணிக்கு வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் ஓடி வந்து சுற்றி வளைத்து உமா மகேஸ்வரியின் கண் முன் மாதேஸ்வரனை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் உயிர் பிழைக்க வேண்டி தப்பி ஓட முயன்றார். ஆனால், மர்ம நபர்கள், அவரை தப்பிக்க விடாமல் வெறித்தனமாக மாதேஸ்வரனை மீண்டும் அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

கொலையுண்ட கணவர் உடலை பார்த்து உமா மகேஸ்வரி கதறி அழுதார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனும், மகளும் தாயின் அழுகுரலை கேட்டு எழுந்து வீட்டின் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அங்கு தந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு இருவரும் கதறி அழுதனர்.

அதிகாலை 2.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தபோது, அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். உமா மகேஸ்வரியின் கதறலை கேட்டுத்தான் அவர்கள் எழுந்து வீட்டின் வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் ஊர் மக்கள் அங்கு கூடினர்.

தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மாதேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உமாமகேஸ்வரி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவரின் சகோதரி சாந்தி (52), திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் கலைவாணன்(60). இவர்களுக்கு ராதா கிருஷ்ணன் (35), சதீஸ்(25) ஆகிய மகன்கள் உள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் மாதேஸ்வரன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் வேலை பார்த்து வந்தார்.

அதுபோல் அவரது மைத்துனர் கலைவாணனும் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். அவர், 2 மகன்களுக்கும் விசா கொடுத்து வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார்.

இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய எனது கணவர் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை கொண்டு, முதலைப்பட்டி பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் நல்ல வருமானம் கிடைத்தது.

மேலும், எனது கணவருக்கும், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ராதா கிருஷ்ணனும், அவரது தம்பி சதீசுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. அப்போது, 3 பேரும் பங்குதாரர்களாக சேர்ந்து ஒரு லாரி வாங்கி தொழில் செய்யலாம் என முடிவு எடுத்தனர். அதன்படி எனது கணவர் ஒரு லாரியை வாங்கினார். தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் அவர் அந்த லாரியை விற்று விட்டார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பிய ராதாகிருஷ்ணனும், சதீசும், லாரி விற்ற பணத்தில் தங்களுடைய பங்கை தருமாறு கேட்டனர். அப்போது எனது கணவரும் பணத்தை தருவதாக கூறினார். இதில் காலதாமதம் ஏற்பட்டால் 15 நாட்களுக்கு முன்பு சதீஸ் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு மிரட்டினார்கள். இது குறித்து சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தோம். போலீசார் அவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு கார் பட்டறையில் பிடித்த தீயை அணைத்து விட்டு வீட்டுக்கு வந்தபோது, சதீஸ் தனது கூட்டாளிகளுடன் வந்து எனது கணவரை வெட்டிக் கொலை செய்து விட்டார். அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சதீஸ், ராதாகிருஷ்ணன், மற்றும் இவர்களது கூட்டாளிகளை கைது செய்ய சேந்தமங்கலம் தனிப்படை போலீசார் துறையூருக்கு விரைந்துள்ளனர்.

கார் பட்டறை அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் துத்திக்குளம் பகுதியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!