மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர்… போலிஸாரிடம் சிக்கியது எப்படி..?


சென்னை அசோக்நகர் 87-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (60). இவரது மனைவி மகேஸ்வரி (53). இவர்களுக்கு கவிதா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அண்ணாமலை வடபழனியில் தனியாக ஆடிட்டிங் அலுவலகம் நடத்தி வருகிறார். மகள் கவிதா தரமணியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் சந்தோஷ் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார். கம்ப்யூட்டர் விளையாட்டுக்கும் அடிமையாகி உள்ளான்.

இந்த நிலையில் நேற்று காலையில் மகேஸ்வரியை தவிர அனைவரும் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டனர். மாலை 5.30 மணி அளவில் கவிதா வேலை முடிந்து திரும்பியவுடன், தந்தை அண்ணாமலையுடன் வீட்டுக்கு சென்றார். அப்போது படுக்கை அறையில் மகேஸ்வரி காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ கொலை செய்தது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அசோக்நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், வடபழனி உதவி ஆணையாளர் சங்கர், இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, சந்த்ரு ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையின் போது, மகேஸ்வரி நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அண்ணாமலை கூறினார். அதே நேரத்தில் தனது மகன் சந்தோசுக்கும் மனைவி மகேஸ்வரிக்கும் இடையே சண்டை நடந்ததாகவும் கூறினார். இதனால் சந்தோஷ், மகேஸ்வரியை தாக்கியதாகவும் தெரிவித்தார்.

இதனால் போலீசார் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர். இருப்பினும் அண்ணாமலையின் நடவடிக்கைகளிலும் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. காலையில் இருந்து எங்கெல்லாம் சென்றீர்கள் என்பதுபற்றி விசாரணை நடத்தினர். இதற்கு அவர் அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன.

பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மாயமாகிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்தன.

இதுவும் அண்ணாமலை மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதனால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அண்ணாமலை உண்மையை கக்கினார். மகேஸ்வரியை நான்தான் கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மகேஸ்வரிக்கும், அண்ணாமலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டை தனது பெயரில் மாற்றச் சொல்லியும், அதிகமாக நகைகள் வாங்கி தர வேண்டும் என்றும் அண்ணாமலையிடம் மகேஸ்வரி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்த தகராறு நேற்று காலையில் முற்றியது. இது போன்று சண்டை வரும் நேரங்களில் மகேஸ்வரியை பலமுறை அண்ணாமலை தாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்றைய தகராறின் போதும் மோதல் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை, வீட்டில் இருந்த சிறிய கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்து பலியானார்.

பின்னர் அண்ணாமலை எதுவும் தெரியாதது போல வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். மாலையில் மகள் வந்த பின்னர் அப்பாவி போல அவருடன் வீட்டுக்கு சென்று நாடகமாடியுள்ளார்.

ஆனால் போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வந்துவிட்டனர். கைதான அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!