கலப்பு திருமணம் செய்த தம்பதி அடித்து கொலை – 13 ஆண்டுக்கு பின் சொந்த கிராமத்தில் நடந்த கொடூரம்..!


கதக் அருகே 13 ஆண்டுகளுக்கு பின் சொந்த கிராமத்துக்கு வந்த கலப்பு திருமண தம்பதி நேற்று பட்டப்பகலில் அடித்து கொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை செய்த பெண்ணின் சகோதரர் போலீசில் சரண் அடைந்தார். ஆணவக்கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலப்பு திருமணம்

கதக் மாவட்டம் முலகுந்தாவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 45). பசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமவ்வா (38). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்தனர். இந்த காதலுக்கு அவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் 2 பேரும் தங்களின் காதலில் உறுதியாக இருந்ததோடு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் மங்களூருவில் வசித்து வந்தனர். இந்த வேளையில் சோமவ்வா தனது பெயரை சோமவ்வா என்ற அமினபி என்று மாற்றிக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், முகரம் பண்டிகையை கொண்டாடுவதற்காக முலகுந்தா கிராமத்துக்கு அஷ்ரப் அலி தனது மனைவி சோமவ்வா, 2 குழந்தைகளுடன் வந்தார். இந்த வேளையில், சோமவ்வாவுக்கு தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை பார்க்க ஆசை வந்தது. இதுபற்றி அவர் கணவர் அஷ்ரப் அலியிடம் கூறினார். அவரும் ஒப்புக்கொண்டார்.

இரும்பு கம்பியால் அடித்துக்கொலை

இதையடுத்து நேற்று காலையில் அஷ்ரப் அலி தனது மனைவி சோமவ்வாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பசாபுரா கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். பசாபுரா கிராமத்தை அடைந்த நிலையில் சோமவ்வாவின் சகோதரர் தேவப்பா அவர்களை வழிமறித்ததோடு, மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரின் தலையிலும் இரும்புகம்பியால் தாக்கினார். இதில், நிலைக்குலைந்து அஷ்ரப் அலி, சோமவ்வா ஆகியோர் கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிளும் சாலையில் விழுந்தது.

இதையடுத்து, அவர்கள் 2 பேர் மீதும் தேவப்பா கொடூரமாக தாக்குதல் நடத்தினார். இதனால் அஷ்ரப் அலி, சோமவ்வா ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

சகோதரர் போலீசில் சரண்

இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற தேவப்பா, சிரஹட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியை போலீசாரிடம் கொடுத்தார். தேவப்பாவை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்பாபு மற்றும் அதிகாரிகள் பசாபுரா கிராமத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அத்துடன், கொலையுண்டு கிடந்த அஷ்ரப்அலி-சோமவ்வாவின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இரட்டை கொலை நடந்த பசாபுரா கிராமம் முலகுந்தா போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால் சிரஹட்டி போலீசார் முலகுந்தா போலீசாரிடம் தேவப்பாவை ஒப்படைத்தனர். அஷ்ரப் அலியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரின் முலகுந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவப்பாவை கைது செய்தனர்.

ஆணவக்கொலையா? விசாரணை

இதுகுறித்து கதக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு கூறுகையில், ‘கலப்பு திருமணம் செய்து கொண்ட சோமவ்வா, 13 ஆண்டுகளுக்கு பின் தனது கணவருடன் சொந்த கிராமத்துக்கு வந்தார். இந்த வேளையில் அவருடைய சகோதரர் தேவப்பா, சோமவ்வா மற்றும் அவருடைய கணவர் அஷ்ரப் அலி ஆகியோரை கொலை செய்து உள்ளார். தேவப்பா, சோமவ்வா ஆகியோருக்கு இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சொத்து தகராறில் கொலை நடந்து இருக்கலாம். இருப்பினும், ஆணவக்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

கலப்பு திருமணம் செய்த பெண் 13 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த கிராமத்துக்கு வந்தபோது கணவருடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பசாபுரா கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!