தூங்கி கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக்கொலை… மகள் உடல் கருகினார்…!!


அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முட்டுவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி மங்கலம்(வயது 70). இவர்களுக்கு கலைச்செல்வி(30) உள்பட 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கலைச்செல்விக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனினும் நான்கு மாதத்தில் கணவர் இறந்துவிட்டதால் அவர் தனது தாய் வீட்டிற்கே திரும்பி, அங்கு வசித்தார். அவருடைய சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு திருமாணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கணேசன், மங்கலம் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் குடும்ப சொத்தாக இருந்த விவசாய நிலத்தை விற்பனை செய்வதில் கணேசன் தீவிரமாக இருந்தார். ஆனால் அதனை விற்பதில் மங்கலத்திற்கு உடன்பாடு இல்லை. இந்த நிலையில் விவசாய நிலத்தில் மங்கலம் உழுது நடவு செய்தார். விற்பதற்காக வைத்திருந்த விவசாய நிலத்தை ஏன் உழவு செய்து நடவு நட்டாய்? என்று மங்கலத்திடம், கணேசன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் கணேசன், மங்கலம், கலைச்செல்வி ஆகிய 3 பேரும் வழக்கம்போல் இரவில் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். மங்கலமும், கலைச்செல்வியும் தனி அறையில் படுத்திருந்தனர். அதே வீட்டில் மற்றொரு அறையில் கணேசன் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் கணேசன் திடீரென விழித்தெழுந்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தூங்கி கொண்டிருந்த மங்கலம், கலைச்செல்வி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து ஓடி விட்டார்.


உடலில் பற்றி எரிந்த தீயால் வலி தாங்க முடியாமல் அய்யோ… அம்மா… காப்பாற்றுங்கள்… என்று மங்கலம், கலைசெல்வி ஆகியோர் கதறி துடித்தனர். உடலில் எரிந்த தீயுடன் இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கீழே சரிந்து விழுந்து மங்கலம் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் கலைச்செல்வியின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் விசாரணை நடத்தி மங்கலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கான மூலக்காரணம் என்ன? என்பது குறித்து கலைச்செல்வியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மனைவியை எரித்து கொலை செய்த கணேசனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் மனைவி மற்றும் மகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். விவசாய நிலத்தை ஏன் விற்பனை செய்வதற்கு கணேசன் ஆர்வம் காட்டினார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மனைவியை கணவர் எரித்து கொலை செய்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!