சசிகலாவின் சொத்துக்கள் எங்கே பதுக்கிவைக்கப் பட்டுள்ளது தெரியுமா? தீபக் அதிர்ச்சித் தகவல்…!


சசிகலாவின் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை அவரும் அவர் குடும்பத்தினரும் இங்கிலாந்து, துபாய் நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தகவல் வெளியிட்டுள்ளார்.

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள் சிக்கின.

சசிகலா குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்வதற்காக 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘‘சொத்துக்கள் வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது?’’ என்று அதிகாரிகள் கேள்விகள் கேட்டு தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். அடுத்தக்கட்டமாக பெங்களூர் ஜெயிலில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சசிகலா குடும்பத்தினர் கதி கலங்கி போய் உள்ளனர்.

அவர்களது ‘பினாமி’களுக்கும் அதிகாரிகள் வலை விரித்துள்ளனர். இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் மூலம் சசிகலா குடும்பத்தினருக்கு பல இடங்களில் சொத்துக்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அவை அனைத்தையும் வருமான வரித்துறையினர் பட்டியலாக தொகுத்து வருகிறார்கள். இதற்கிடையே சசிகலா குடும்பத்தினர் வெளிநாடுகளில் வாங்கி இருக்கும் சொத்துக்கள் மீதும் அதிகாரிகள் பார்வை திரும்பியுள்ளது.

இந்த சொத்துக்கள் தொடர்பான பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினரும் விசாரணையில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று சசிகலா பற்றியும் அவர் சொத்துக்கள் பற்றியும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

அந்த பேட்டியில் தீபக் கூறி இருப்பதாவது:-

சசிகலாவை நான் மிகவும் நம்பினேன். உண்மையை சொல்லப் போனால், நான் அவருடன் சில வி‌ஷயங்களில் பங்கு கொண்டிருந்தேன். ஆனால் அவர் எங்களிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. சசிகலா எங்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டார்.


எங்கள் அத்தையை (ஜெயலலிதா) அவர் ஏமாற்றியுள்ளார் என்று எனக்கு எப்போது தெரிய வந்ததோ, அப்போதே நான் அவருடனான தொடர்பை துண்டித்து விட்டேன். என்றாலும் எங்களுக்குள் தனிப்பட்ட வி‌ஷயம் என்று எதுவும் இல்லை.

அவர் ஏமாற்றியதை இப்போது சொல்கிறேன். மற்றபடி ஒவ்வொரு வி‌ஷயத்தையும் ஊடகங்களுடன் நான் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. சசிகலா நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.

சட்ட விரோத மணல் திருட்டு மூலம்தான் அவருக்கு நிறைய பணம் கிடைத்தது. பலரது உதவியுடன் அவருக்கு ‘மணல்’ பணம் வந்தது. அந்த பணம் மற்றும் சொத்து ஆவணங்களை அவரும் அவர் குடும்பத்தினரும் இங்கிலாந்து, துபாய் நாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.

அந்த நாடுகளின் எந்தெந்த பகுதிகளில் அவை பதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் எனக்குத் தெரியாது. சசிகலா சேர்த்துள்ள சொத்துக்கள் பற்றி நான் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பேன்.

அதற்கு ஆதாரமான ஆவணங்கள் என்னிடம் போதுமான அளவுக்கு உள்ளது. அந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்வேன். சசிகலா இவ்வளவு சொத்துக்களை வாங்கி குவிக்க அவருக்கு எங்கு இருந்து வருவாய் வந்தது என்பதை அவரால் சொல்லவே முடியாது.

அவரது மற்ற தொழில்கள் எல்லாம் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. ஆனால் மணல் மூலம்தான் அவருக்கு அதிக பணம் கிடைத்தது. அப்படி கிடைத்த பணம் மூலம் வாங்கிய சொத்துக்களின் ஆவணங்கள்தான் வெளிநாடுகளில் உள்ளன.

இதற்கு அவருக்கு யார்-யார் உதவிகள் செய்தனர் என்ற விபரம் எனக்கு தெரியும். அந்த நபர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் நான் வருமான வரித்துறையிடம் சொல்ல உள்ளேன்.

வருமான வரித்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும். சசிகலாவுக்கு சக்தி வாய்ந்த தொழில் அதிபர்கள் பலர் உடந்தையாக இருந்தனர்.

அவர்கள் மூலம்தான் சசிகலா குடும்பத்தினர் பணம் சம்பாதித்தனர். என் அத்தை வீட்டிலும் தான் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினார்கள். ஆனால் அந்த சோதனையில் சட்ட விரோதமாக எதுவும் சிக்கவில்லை. இவ்வாறு தீபக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!