பொது இடத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் கொடூரமாக அடித்து படுகொலை…!


உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ மர்மநபர்களால் பொது இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ மர்மநபர்கள் 3 பேரால் பொது இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதான அப்துல் ஷமாத் கான் ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் ஆவார். இந்நிலையில் நேற்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஷமாத் கானை, சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் வழிமறித்து தன் கையில் வைத்திருந்த தடி கொண்டு தாக்கினார். இதனால் கீழே விழுந்த ஷமாத் கான், அந்த நபரின் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முற்பட்டார்.

ஆனால், மேலும் இருவர் சேர்ந்து தாக்கியதால் ஷமாத் கான் இரத்தம் சொட்ட நிலைகுலைந்து சாலையின் சுவற்றில் சாய்ந்தார். இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காமிரா காட்சியில் பதிவாகியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அக்காட்சியில், தாக்குதல் சம்பவம் நடைபெற்று கொண்டிருக்க அவ்வழியே சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்றவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல கடந்து செல்வது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே தாக்குதல் நடத்திய 3 பேரில் ஒருவர் பெயர் ஜூனாய்டு என்றும், அவர் மீது உள்ளூர் போலீஸ் நிலையத்தில் 10 வழக்குகள் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஷமாத் கானின் மரணம் குறித்து அவரது சகோதரர் அப்துல் வாகித் கூறுகையில், குற்றவாளிகள் எனது சகோதரரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இது குறித்து நாங்கள் போலீஸ் நிலையத்தில் மூன்று முறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை எனக் கூறினார்.

கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அலகாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநில காவல் துணை ஆய்வாளராக பணியாற்றிய அப்துல் ஷமாத் கான் கடந்த 2006-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!