கலைஞர் இருக்கும்போதே கட்சி பதவிக்கு ஆசைப்படவில்லை- முக அழகிரி உருக்கம்..!!


சென்னையில் வருகிற 5-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று 2-வது நாளாக மு.க.அழகிரி வெளி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக ஏற்பதில் தீவிரம் காட்டுகிறார். தி.மு.க. தலைவர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. யார் தலைவர் என்ற கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது.

என்னை சேர்க்காமல் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எந்த தேர்தல் நடந்தாலும் இத்தனை நாள் அவர்கள் நிலை எப்படி இருந்ததோ அதே போல் தான் இனிமேலும் கட்சியின் நிலை இருக்கும்.

கருணாநிதி இருக்கும் போதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான், இப்போதா ஆசைப்படப் போகிறேன்.

செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்பார்கள் என்று பாருங்கள். இந்த பேரணியால் தி.மு.க.வுக்கு கண்டிப்பாக ஆபத்து இருக்கும்.

அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பணியை பாராட்டியுள்ளார். இதில் இருந்தே தி.மு.க.வினர் என்னை புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.வில் கதவு மூடப்பட்டது. இந்த பேரணி நடத்துவது நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கு தான் என்று அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு “அதனால் என்ன தவறு? தி.மு.க. தாய் கழகம் தானே. அது அண்ணா, கலைஞரால் உருவானது. அதில் நான் இணைந்தால் தவறில்லை என்று மு.க.அழகிரி பதில் அளித்தார்.soource-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!