பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்த மாணவி விடுதியில் இருந்து நீக்கம்..!


பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்த மாணவியை விடுதியைவிட்டு வெளியேற்றி கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறினார்.

பாலியல் தொல்லைக்கு விடுதி வார்டன்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் செயல்பட்டதாக மாணவி முன்வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை பெரிதுப்படுத்தி இருக்கிறது. மாணவியுடன், பேராசிரியைகள் பேசிய ஆடியோ வெளியானது.

இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன்தினம் ஆஜராகி, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, நீதிபதி மகிழேந்தி வேளாண் கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், மாணவ, மாணவிகள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.

மாணவியின் 40 பக்க வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அவர் நேற்று கல்லூரிக்கு சென்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் மாணவியிடம் நீதிபதி மகிழேந்தி வாக்குமூலம் பெற்றார். இதனிடையே, கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


மாணவிக்கு எதிராக உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 3 பேர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப்புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை.

எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இது போன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய 200-க்கும் மேற்பட்ட ஐ.டி. கார்ட்டுகள் மற்றும் பென்சில், பேனா, ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார்.

இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2-வது நாளாக இன்று காலையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, மாணவி வெளியிட்ட ஆடியோ மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கூறியதாவது:-

கல்லூரியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை எஸ்.பி.யிடம் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விடுதியில் போலீசார் ஆய்வு செய்தபோது, மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. தனி அறையில் தங்க வைக்கப்பட்டு மாணவி தனிமைப்படுத்தப்பட்டார். சக மாணவிகள் உள்பட யாரிடமும் பேசாதபடி மன உளைச்சல் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இரவு நேரத்தில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் விடுதிக்கு வந்து சென்றதாகவும், அப்போது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகாரில் மாணவி கூறி இருந்தார். தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு மாணவியை தனிமைப்படுத்தியது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவும் 2-வது நாளாக கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவிப்பேராசிரியர் தங்க பாண்டியனை அதிரடியாக சஸ்பெண்டு செய்தும், மாணவியை விடுதியைவிட்டு வெளியேற்றியும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி, வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அளித்த பேட்டியில்:-

ஒரு மாணவியால் ஒட்டுமொத்த கல்லூரிக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. உண்மை நிலவரம் விரைவில் தெரியவரும் என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!