கோர மழையில் பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தையை பறிகொடுத்த தம்பதி – அதிர்ச்சி சம்பவம்


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா முக்கொட்லு கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவரது மனைவி சரஸ்வதி (25). இந்த தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் சரஸ்வதி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான சரஸ்வதிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக குடகு மாவட்டத்தில் கனமழை கோரதாண்டவமாடியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து விழுந்தன. அதுபோல் முக்கொட்லு பகுதியிலும் தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழைக்கு கடந்த 19-ந்தேதி நிலச்சரிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் உருக்குலைந்துபோனது. இதில் முத்து-சரஸ்வதி தம்பதியின் வீடும் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது.

முன்னதாக விபரீதத்தை உணர்ந்த முத்து-சரஸ்வதி தம்பதி தங்களது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு உயிர் தப்பிக்க ஓடினர். குழந்தையை தாய் சரஸ்வதி தூக்கி வைத்திருந்தார். அவர் ஓடிய போது சேற்றில் அவரது கால் சிக்கியதுடன் தவறி கீழே விழுந்தார்.

இதனால் அவரது கையில் இருந்த குழந்தை தூக்கி வீசப்பட்டு, அருகில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கியது. அந்த வெள்ளத்தில் குழந்தை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது.

தன் கண்முன்னே குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததை பார்த்த சரஸ்வதியும், முத்துவும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. குழந்தை பலியானதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் சரஸ்வதி மயங்கினார். அவரை முத்துவும், அந்தப் பகுதி மக்களும் மீட்டு மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!