நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்தி தான் காரணம் – வாஜ்பாய் பகீர் தகவல்..!


தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.

மறைந்த வாஜ்பாய் கட்சி மாறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களிடமும் அன்பாக பழகியதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. வேறு கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த உதவிகளை வாஜ்பாய் ஒரு போதும் மறந்தது இல்லை.

அவரது சுயசரிதை புத்தகமான “த அன்டோடு வாஜ்பாய்” என்ற புத்தகத்தில் அவர் தனக்கு உதவி செய்த மறக்க முடியாத தலைவர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்திக்கு முதலிடம் கொடுத்துள்ளார்.

நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறி உள்ளார். ராஜீவ்காந்தியை புகழ்ந்து அந்த புத்தகத்தில் வாஜ்பாய் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. என்னை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரக பாதிப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால்தான் அந்த சிறுநீரக பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


ஒருநாள் காலை பிரதமர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ராஜீவ்காந்தி பேசினார். அவர் என்னிடம் இந்தியா சார்பில் நியூயார்க் சென்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். என்னுடன் அரசியல் கட்சிகள், அதிகாரிகள் குழுவும் வர உள்ளது. நான் அந்த குழுவில் உங்களது பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.

நீங்கள் என்னுடன் நியூயார்க் வாருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து உங்களது சிறுநீரக பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழுவில் இடம் பெற்று நானும் சென்றேன். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போதும் ராஜீவ்காந்தி என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

“நீங்கள் நன்றாக முழுமையாக குணம் அடைந்த பிறகுதான் இந்தியாவுக்கு திரும்பி வரவேண்டும். நல்ல முறையில் சிகிச்சை பெற்று வாருங்கள்” என்றார். அவர் உதவியால் நான் பெற்ற சிகிச்சைதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

இவ்வாறு வாஜ்பாய் மறக்காமல் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவித்து எழுதி உள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!