வெள்ளத்தில் மிதக்கும் கேரளா – பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு…!


கேராளாவில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 114 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடற்படையினர் விமானம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 114 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

விமானம் மூலம் மீட்பு

மீட்புப் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், துணை ராணுவப்படையினர் ஈடுபட்டு வந்தனர். நிலைமை மோசமடைந்ததையடுத்து, மீட்புப் பணியில், விமானப்படை மற்றும் கடற்படையினர் இணைந்துள்ளனர்.

திருச்சூர், அலுவா, முவத்துப்புழா பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கடற்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.

போக்குவரத்து துண்டிப்பு

மழை காரணமாக கேரளாவில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து இரண்டாவது நாளாக கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்களின் வழித்தடத்தை மாற்றியதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

குமரியின் இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் புனலூர், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

மழை காரணமாக கேரள மாநில பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த ரயில்வே தேர்வும் அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணி குறித்து பிரதமர் மோடியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனைத்து உதவுகளை செய்ய மத்திய அரசு உறுதியளித்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி, கேரளா வரவிருப்பதாக மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர், நாளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!