தொட்டாலே கருகச் செய்து சாகடிக்கும் வெந்நீர் நதி… வெளி வந்த அதிர்ச்சி தகவல்…!!


கொதிக்கும் அளவிற்கு ஓடும் வெந்நீர் நதி, அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது.

தென் அமெரிக்காவின் பெரு எனும் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி.

கொதிக்கும் அளவிற்கு ஓடும் நீர், அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது. அங்கு நிலவும் கதைகளின் படி, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஒரு சிறிய குழு அமேசான் மழைக்காடுகளில் நிறையத் தங்கம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து அதை எடுக்க உள்ளே சென்றது.

சென்றவர்கள் அங்கே விஷத்தன்மையுடன் கூடிய நீர், மனிதனை விழுங்கும் பாம்புகள் மற்றும் இதெல்லாம் போதாது என வெந்நீர் ஓடும் ஆறு என எல்லாம் இருப்பதாகவும் இதில் அந்த ஆறு அனைவருக்கும் தீப்புண்களை ஏற்படுத்துவதாகவும் பீதியுடன் கூறியுள்ளனர்.

அதே பெரு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரெஸ் ரூஸோ எனும் புவி விஞ்ஞானி சிறு வயதிலிருந்தே இந்த மாதிரியான கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.

அமேசான் காடுகளின் அடர்ந்த பகுதியில் ஒரு நதி இருக்கிறது. அதனடியில் ஏதோ பெரிய அடுப்பு இருப்பதைப் போல அதன் நீர் எப்போதும் கொதி நிலையிலேயே இருக்கிறது என்று கூறிய அவர் தாத்தாவின் இந்த வார்த்தைகள் அவரின் அறிவியல் அறிவை எப்போதும் சீண்டிக்கொண்டிருந்தன.


அது மட்டுமல்லாது அவரின் தாய் சிறுவயதில், தனது தங்கையுடன் அந்த நீரில் நீந்தி உள்ளதாகவும் கூறி இவரின் ஆர்வத்தை மேலும் கூட்டினார்.

இயல்பிலேயே புவியியலில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்த ஆண்ட்ரெஸ் அந்தத் துறையில் கற்றுத் தேர்ந்தார். முனைவர் பட்டம் பெற புவிவெப்ப சக்திகுறித்த ஆய்வில் இறங்கினார்.

அப்போது தான், அவர் தன்னுடைய தாத்தா கூறிய அந்த வெந்நீர் நதிகுறித்து ஆராயத் தொடங்கினார். அப்படி ஒரு நதி உண்மையில் இருக்குமா என்ற தயக்கத்துடன் அமேசான் காடுகளில், கடந்த 2011-ம் ஆண்டு தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவர் சந்தித்த வல்லுநர்கள் அனைவருமே அப்படி ஒரு வெந்நீர் நதி நிச்சயம் இருக்கப்போவதில்லை என்றே கூறினார்கள். ஆனால் ஆண்ட்ரெஸ் அவர்களின் அறிவியல் மூளையோ ஒருவேளை அந்த நதியின் அருகில் எரிமலை ஏதேனும் இருந்தால் அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கூறியது.

உண்மையில் அமேசான் காடுகள் பகுதியில் எரிமலை எதுவும் கிடையாது. சந்தேகத்துடனே தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு இன்ப அதிர்ச்சியாக நான் இருக்கிறேன் என்று அந்த நதி வெளிச்சத்திற்கு வந்தது. உண்மையில், அந்த நதி நீர் அதீத வெப்பத்தில் இருந்தது.

நான் அந்த நதியைப் பார்த்தவுடனேயே முதலில் அதனுடைய வெப்பநிலையைத்தான் சோதித்தேன். அப்போது அந்த நீர் 86 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்தது.

அது நீரின் கொதிநிலை இல்லையென்றாலும், அதற்கு மிக அருகில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது, இந்த வெந்நீர் ஆறு என்பது வெறும் கட்டுக்கதை அதை அல்ல, நிஜம் என்று புரிந்தது என்று கடந்த 2014-ம் ஆண்டு TED கருத்தரங்கில் குறிப்பிட்டார் ஆண்ட்ரெஸ்.


வெப்ப நீரூற்றுகள் இவ்வுலகில் ஒரு பொருட்டல்ல என்றாலும் இந்த ஆறு 25 மீட்டர் அகலம், 6 மீட்டர் ஆழம் மற்றும் 6.25 கிலோமீட்டர் நீளம்.

அதிலும் ஆச்சரியமாக, இந்த நதியின் மிக அருகில் இருக்கும் எரிமலையே 700 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அப்போதுதான் புரிந்தது இந்த நதி மற்ற நதிகளைப் போல இல்லை என்று.

அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் அந்த நதிக்கு வைத்த பெயர் ஷனாய் டிம்பிஷ்கா. அந்த பெயரின் அர்த்தம் சூரியனின் வெப்பத்தால் கொதிக்கவைத்தது என்று பொருள்.

சராசரியாக அந்த நீரின் வெப்பம் 99 டிகிரி செல்சியஸ். நீங்கள் தினமும் குடிக்கும் ஒரு கோப்பை சுடுகாபியின் வெப்பம் எவ்வளவு தெரியுமா? வெறும் 55 டிகிரி செல்சியஸ் தான்.

இந்த நதி நீரினுள்ளே கை வைத்தால் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்படும் அளவுக்கு வெப்பம். இவ்வளவு வெப்பம் சூரியனிடமிருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த ஆண்ட்ரெஸ், அங்கேயே தங்கி அந்த நதியைக் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

அவருக்கு நேஷனல் ஜியோக்ராபிக் நிறுவனமும் உதவி செய்தது. பின்புதான் பல உண்மைகள் தெரியவந்தன.


அதன்படி, அந்த நதிக்குச் சூரியனிடமிருந்து இந்த வெப்பம் ஏற்படவில்லை. மாறாகத் தவறாக உருவான சூடான ஆதி நீரூற்றுகள் என்பதைக் கண்டறிந்தார்.

அதாவது, நம் பூமியை ஒரு மனித உடல் போல பாவித்துக் கொள்ளுங்கள். அதில் ஓடும் தவறான வெப்பக்கோடுகள் மற்றும் பிளவுகள் நம் உடலில் இருக்கும் தமனிகள் போன்றவை.

இதிலிருக்கும் நீர் அதீத வெப்பம் கொண்டதாய் இருக்கும். அது வெளியே வரும்போது, புவிவெப்பநிலை வெளிப்பாடுகள் ஏற்படும். அதில் ஒரு நிகழ்வுதான் இந்த வெந்நீர் ஆறு.

அது போலவே, இந்த நதிஉருவாக காரணம் முழுக்க முழுக்க மழை நீர் என்று ஆண்ட்ரெஸ் அவர்களின் ஆராய்ச்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்த தேங்கிய நீர், அடியில் இருந்த சூடான ஆதி நீரூற்றுகளுடன் வினைபுரியத் தொடங்க வெந்நீர் ஆறு உருவாகியுள்ளது.

அவரது ஆராய்ச்சியின்போது இந்த நீரில் தவறி விழும் தவளைகள், பூச்சிகள், பாம்புகள் உட்படப் பல உயிரினங்கள் கருகிப் போய் உயிர் இழந்ததைப் பார்த்ததாக கூறுகிறார் ஆண்ட்ரெஸ்.

ஆனால், குளிர் காலங்களில் இந்த நதியின் வெப்பம் ஓரளவு குறைந்து விடுவதாகவும், அப்போது தன் தாயார் கூறியதுபோல அதில் நீந்தலாம் என்றும் தெரிவிக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!