பிக்பாஸ் ஹரிஷ், ரைசா நடித்த பியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்..!


நடிகர் ஹரிஷ் கல்யாண்
நடிகை ரைசா
இயக்குனர் இளன்
இசை யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு ராஜா பட்டாச்சார்யா
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், தந்தை பாண்டியன், தாய் ரேகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரேகா ஆசைப்பட்டு வருகிறார். இதற்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார்.

ஹரிஷ் கல்யாணோ, தன்னுடைய அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாயகி ரைசாவை தினமும் பார்த்து ஒருதலையாக காதலித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் ரைசா, ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் அலுவலத்தில், அவருடைய பக்கத்து சீட்டுக்கே வேலைக்கு வருகிறார். இதனால், அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைகிறார் ஹரிஷ் கல்யாண்.

எந்த பழக்கமும் இல்லாத ஹரிஷ் கல்யாண், ரைசாவிடம் பயந்து பயந்து பழகுகிறார். ஆனால், ரைசா மிகவும் யதார்த்தமாக பழகி வருகிறார். தன்னுடைய காதலை ஹரிஷ் சொல்லுவதற்கு முன்னதாகவே இருவரும் ஒன்றாகி விடுகிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தன்னுடைய காதலை சொல்லுகிறார் ஹரிஷ். ஆனால், ரைசா எனக்கு காதல் செட்டாவது என்று கூறி காதலை ஏற்க மறுக்கிறார்.


இருந்தாலும் இருவரும் ஒன்றாக பழகி வருகிறார். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத நிலைக்கு வருகிறார்கள். இதனால், லிவ்விங் டூ கெதராக இருக்கலாம் என்று முடிவு செய்து, ஹரிஷ் கல்யாண் இருக்கும் பக்கத்து வீட்டிற்கு குடியேறுகிறார். தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவில் ரைசாவுடன் தங்கி வாழ்ந்து வருகிறார் ஹரிஷ்.

இந்நிலையில், ரேகாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. உடனே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், ரைசா திருமணத்திற்கு மறுக்கிறார்.

இறுதியில் ஹரிஷ் கல்யாண், தன்னுடைய தாய்க்காக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? ரைசாவுடனான காதல் என்ன ஆனது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், முந்தைய படங்களை இட இப்படத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இவருடைய வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரைசாவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹரிஷ், ரைசா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களின் ஈடுபாடு அமைந்துள்ளது. குறிப்பாக இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை சீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்திருக்கிறது.


அம்மாவாக வரும் ரேகா, மகன் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். அப்பாவாக வரும் பாண்டியன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ரைசாவின் அப்பாவாக வரும் ஆனந்த் பாபு, தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி இருப்பது மகிழ்ச்சி. முனிஷ்காந்த் காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக இவரிடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகளில் சிரிப்பு சரவெடி.

பெற்றோர்கள் பார்க்கும் திருமணமும் சரி, லிவ்விங் டு கேதர் இருப்பவர்களும் சரி எதுவும் நிரந்தரம் இல்லை. உண்மையான காதல் இருந்தால் அதுதான் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இளன். முதல் படத்திலேயே இளைஞர்களை தன் வசமாக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரம் தேர்வு. அவர்களிடம் கையாண்ட விதம். போரடிக்காத வகையில் திரைக்கதையின் ஒட்டம் என செவ்வனே படத்தை கொடுத்திருக்கிறார் இளன்.

இப்படம் மூலம் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படத்தின் பெரிய பலமும் இவருடைய இசை. நிறைய பாடல்கள், அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் நான் தான் முன்னணி என்று நிருபித்திருக்கிறர் யுவன். ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பியார் பிரேமா காதல்’ இளமை துள்ளல்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!