ஜெயலலிதாவாக மாற துடிக்கும் திரிஷா..!


திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது.

‘த டர்டி பிக்சர்’ படம் வசூல் சாதனை நிகழ்த்திய பிறகே வாழ்க்கை வரலாறு கதைகள் பக்கம் இயக்குனர்கள் பார்வை திரும்பியது. இந்த படத்தில் சில்க் சுமிதாவாக நடித்து இருந்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது.


கவர்ச்சி நடிகை ‌ஷகிலா வாழ்க்கையும் படமாகிறது. ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையும் படமாகிறது. என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவும் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டியும் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்தது. இப்போது கபில்தேவ் வாழ்க்கையையும் படமாக்குகின்றனர்.

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது தனியாக சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.

ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது டுவிட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார். இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!