15 வயதில் பொறியியல் பட்டதாரியான இந்திய சிறுவன் சாதனை..!


அமெரிக்காவில் வசித்து வருகிற பிஜூ ஆபிரகாம், தாஜி ஆபிரகாம் என்ற இந்திய தம்பதியரின் மகனான தனிஷ்க் ஆபிரகாம் மழலை மேதையாக திகழ்கிறார்.

15 வயதான தனிஷ்க், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து உயிரி மருத்துவ பொறியியல் பட்டதாரி ஆகி உள்ளார். இது ஒரு சாதனை ஆகும்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளேன். இது மிகுந்த உற்சாகம் அளித்து இருக்கிறது. இது எனக்கு பெருமிதம் அளித்து இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

கேரள மாநிலம் திருவல்லாவை பூர்வீகமாக கொண்டு உள்ள பிஜூ ஆபிரகாம், தாஜி ஆபிரகாம் தம்பதியர், தங்கள் மகனின் சாதனைக்காக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது பற்றி அவர்கள் குறிப்பிடுகையில், ‘‘தனிஷ்க் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரிடம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்’’ என்று கூறினர்.

தீக்காயம் அடைந்த நோயாளிகளின் உடலை தொடாமலேயே அவர்களின் இதயத்துடிப்பை அறிந்துகொள்ள உதவும் கருவியை தனிஷ்க் வடிவமைத்து உள்ளார்.

என்ஜினீயரிங் பட்டதாரியாகி உள்ள இவர், இப்போது பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து உள்ளார்.

இவரது தந்தை பிஜூ ஆபிரகாம், சாப்ட்வேர் என்ஜினீயர். தாயார் தாஜி ஆபிரகாம் கால்நடை மருத்துவர். ஆனால் மகனுக்காக தாய் வேலையை ராஜினாமா செய்து விட்டு மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். இந்த தம்பதியருக்கு தியாரா தங்கம் ஆபிரகாம் என்ற மகளும் உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!