உ.பி மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்; ஐசியு அறைக்குள் துள்ளி குதிக்கும் மீன்கள்..!


உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.

தலைநகர் லக்னோ, ஷரான்பூர், முசாபர்நகர், பரேலி உள்பட எண்ணற்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி விட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் உடைமைகளை இழந்ததோடு, இருப்பிட வசதியும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த 4 நாட்களில் 69 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஷரான்பூர் மாவட்டத்தில் மட்டும் மழை, வெள்ளத்துக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 86 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதமாக நடத்திட அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

இதற்கிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக யமுனை நதியின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு யமுனா நதியின் நீர் மட்டம் 205.30 மீட்டர் உயரத்தை எட்டியது.

இதனால் யமுனை நதியை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

உத்தர பிரதேசம்,பீகார், உட்பட பல்வேறு வட மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் நாலந்தா மருத்துவமனை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மருத்துவமனை வளாகம் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

100 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதி கொண்ட நாலந்தா மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மீன்கள் துள்ளி குதித்து விளையாடின. அது மட்டுமின்றி, பாம்பு, தேள் போன்றவையும் மிதந்து வந்ததால் நோயாளிகள் பீதி அடைந்தனர்.

வெள்ளத்தால் நோயாளிகள் படுக்கையை விட்டு கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை பீகாரின் பெரும்பாலான பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!