விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கைக்கு முடிவுக்கு வருகிறது..!


விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சத்தை ஈக்வடார் அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால், அவரின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது.

அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது.

இதற்காக, அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சி செய்தது. இதனையடுத்து ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு அசாஞ்சே சென்றார். அங்கு அவருக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக லண்டன் சென்று அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் 2012ம் ஆண்டு அரசியல் தஞ்சம் புகுந்தார். இதனால் கடந்த 6 ஆண்டுகளாக நிழல் வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமைடைந்துள்ள அசாஞ்சேவை தூதரகத்தை விட்டு வெளியேற்ற முடிவு ஈக்வடார் அரசு முடிவு செய்துள்ளது. லண்டனில் கடந்த வெள்ளி அன்று நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் ஈக்வடார் அதிபர் லெனின் மோரெனோ கலந்துகொண்டார்.


அப்போது, நடைபெற்ற பிரிட்டன் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அசாஞ்சேவை ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றி பிரிட்டனிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அவர் ஒப்புக்கொண்டார். அதன்படி அடுத்த வாரம் அல்லது அடுத்த சில தினங்களில் அசாஞ்சேவிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சத்தை ரத்து செய்து அவர் தூதரகத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அவர் வெளியேற்றப்படும் பட்சத்தில், ஜாமின் விதிமுறைகளை மீறியதாக ஏற்கனவே அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் பிரிட்டன் அரசு அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது தொடர்பாக அசாஞ்சேவை பிரிட்டன் அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!