4 மாத கர்ப்பிணியை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொன்ற கொடூரன்… எதெற்கெனத் தெரியுமா?


புதுக்கடை அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணியை கொடூரமாக கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் சபரியேல். இவரது மகன் சீமோன் (வயது 33). கட்டிடத் தொழிலாளி.

இவருக்கும், காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த தாசையன் மகள் ஷாலினி (24) என்பவருக்கும் கடந்த 22.5.2017 அன்று திருமணம் நடந்தது. ஷாலினி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

லேப்-டெக்னீசியன் படிப்பு முடித்த ஷாலினி, அங்குள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தார். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல நேற்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சீமோன், கிரைண்டரை தூக்கி ஷாலினியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

அதன்பிறகும் ஆத்திரம் தீராத சீமோன், மயங்கி கிடந்த ஷாலினியை தரதரவென சமையல் அறைக்கு இழுத்துச் சென்று போட்டார். பின்னர் சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டார்.

கியாஸ் அறை முழுவதும் பரவியதும் அங்கு தீ வைத்து விட்டு அருகில் உள்ள அறையில் போய் சீமோன் பதுங்கிக் கொண்டார். இதில் சமையல் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. ஷாலினியின் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது.

உடலில் தீப்பிடித்ததும் ஷாலினி மயக்கம் தெளிந்து அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் ஷாலினி உடல் கருகி இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். வீட்டுக்குள் போலீசார் நுழைந்ததும் மற்றொரு அறையில் பதுங்கி இருந்த சீமோன், பயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் வேகமாக செயல்பட்டு அவரை மீட்டனர்.

வீட்டில் தீப்பிடித்ததில் சீமோனின் உடலிலும் சிறிய காயங்கள் ஏற்பட்டன. இதற்காக போலீசார் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசாரிடம் அவர் கூறுகையில் நானும், எனது மனைவியும் தற்கொலைக்கு முயன்றோம். இதில் எனது மனைவி ஷாலினி பலியாகி விட்டார். நான் பிழைத்துக் கொண்டேன் என முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

அவர் கூறுவதை ஏற்காமல் போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஷாலினியின் உறவினர்கள் கூறுகையில் திருமணத்தின்போது சீமோனுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை கொடுத்தோம்.

தற்போது சீமோன் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த வீட்டை கட்டி முடிக்க ஷாலினியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சீமோன் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை இருந்தது.

இந்த பிரச்சனையில் தான் ஷாலினியை அவர் கொலை செய்து இருக்க வேண்டும் என தெரிவித்தனர். ஷாலினி கொலைக்கு இது தான் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

ஷாலினிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. வீட்டுக்குள் கருக்கட்டையாகி கிடந்த ஷாலினியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சீமோன் சிலிண்டரை திறந்து விட்டதில் கியாஸ் முழுவதுமாக வெளியேறி இருக்கிறது. இதனால் தான் சிலிண்டர் வெடிக்காமல் இருந்துள்ளது. இல்லாவிட்டால் சிலிண்டர் வெடித்து அந்த வீடு மட்டுமல்லாமல் பக்கத்து வீடுகளும் சிதறி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். மனைவியை கணவனே தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் புதுக்கடையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.