போயஸ் கார்டன் – எடப்பாடியின் துரோகத்தை புட்டுப் புட்டு வைத்த தினகரன்…!


போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று கூறிய எடப்பாடியின் துரோக அரசு தொண்டர்களையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

போயஸ்கார்டனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை குறித்து டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் கண்டனமும், குற்றச்சாட்டும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று சொல்லி தொண்டர்களையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு. இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும், பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்.

தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக் கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்…?

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

முன்னதாக அவர் தூத்துக்குடி, திருச்செந்தூரில் அளித்த பேட்டி வருமாறு:-

ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தில் காலூன்ற நினைப்பவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் இருவரையும் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது.

சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தங்களது வீட்டிலும் நடந்து விடக் கூடாது என்ற பயத்தில் அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்.

இந்த சோதனை முடியட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு எல்லாம் காரணமானவர்கள், 1½ கோடி தொண்டர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். ஜெயலலிதாவின் வீடு எங்களுக்கு கோவில் போன்றது. அவரது அறை கர்ப்பகிரகம் போன்றது. அங்கு ஏதோ வைத்திருப்பார்கள் என்று அவர்கள் சோதனை இடுகிறார்கள்.

அம்மாவின் வீட்டில் சோதனை செய்ய அதிகாரிகள் வந்ததில் ஏதோ சதி இருக்கிறது. இந்த வி‌ஷயத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. எப்படியாவது எங்களை அரசியலை விட்டு அழித்து விட வேண்டும் என எண்ணியே வருமான வரித்துறையை கையில் எடுத்துள்ளார்கள்.

சோதனைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். வீரர்கள் போல போராடுவோம். இதற்காக எந்த தியாகத்தை செய்ய தயாராக உள்ளோம்.

சோதனை நடத்தியதின் மூலம் ஒருவர் குற்றவாளி என்பது நியாயமாகாது. நிச்சயம் காலத்திற்கு பதில் சொல்ல வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை 40-க்கு 37 தொகுதிகளில் அம்மா வெற்றி பெற செய்தார். இதனால் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு இயக்கத்தை அழித்து விட்டு இன்னொருவர் வளரலாம் என்றால் அவர்கள்தான் அழிவார்கள். தமிழகத்தில் மக்கள் அம்மாவின் வழியில் நிற்பார்கள். எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் வீடுகளில் தான் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்க வேண்டும். சேகர் ரெட்டி வீட்டிலும், ராமமோகன்ராவ் வீட்டிலும் சோதனை நடந்த போது மத்திய போலீஸ் வந்தது.

இப்போது மாநில போலீசார் வந்துள்ளார்கள். யார் கெட்டு போனாலும் தாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இதை காலம் விடாது.

சிலீப்பர் செல் எம்.எல். ஏ.க்கள் இன்னும் 20 பேர் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

இதுபோன்ற சோதனை நடத்தினால் எம்.எல்.ஏ.க்கள் பயந்து அமைதியாக இருந்து விடுவோம் என்ற அரசியல் சதிதான் இது. இந்த சதியை எல்லாம் முறியடித்து, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். சிலீப்பர் செல்கள் வெளியில் வர வேண்டிய நேரத்தில் வருவார்கள்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஊழல் அரசை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கள் எம்.எல்.ஏ.க்களும் குறைந்தபட்சம் முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

ஆனால் எங்களது கூட்டத்திற்கு அனுமதி மறுத்து எங்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர். தமிழகத்தில் எங்களது தொண்டர்கள் கடும் எழுச்சியோடு உள்ளனர். திருச்செந்தூர் முருகனை சுவாமி தரிசனம் செய்து விட்டு தெரிவிக்கிறேன். எடப்பாடி அரசு வரும் பொங்கலுக்குள் வீட்டுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.