யாழ்ப்பாண ஐகோர்ட் மகேஷ் சேனநாயகேவுக்கு சம்மன்…!


இலங்கையில் கடந்த 1996-ம் ஆண்டு காணாமல்போன 24 தமிழர்கள் தொடர்பாக ராணுவ தளபதி நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க யாழ்ப்பாணம் ஐகோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.

இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகிறது. இவர்களை தவிர மேலும் சில ஆயிரம் பேர் மாயமானதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.


உச்சக்கட்ட போருக்கு முன்னதாகவே நாடு முழுவதும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக பலரை ராணுவம் கைது செய்தது. அவ்வகையில்,யாழ்ப்பாணத்தில் உள்ள நவட்குலி பகுதியை சேர்ந்த சிலரை கடந்த 1996-ம் ஆண்டு ஜுலை மாதம் ராணுவம் கைது செய்தது.

அவர்களின் கதி என்ன ஆனது? என்பது தெரியாத நிலையில், மாயமான 24 பேரின் குடும்பத்தார் இதுதொடர்பாக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை ராணுவ தலைமை தளபதி மகேஷ் சேனநாயகே மற்றும் இரு அரசு உயரதிகாரிகள் நாளை (18-ம் தேதி) நேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!