ஜின்தோட்டையில் இடம் பெற்ற இனமுறுகலை அடுத்து ஊரடங்கு அமுல்…!


காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து அங்கு நேற்றிரவு முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் உள்ளிட்ட பல வீடுகள், கட்டங்கள் தீயிடப்பட்டும், சேதமாக்கப்பட்டும் உள்ளன. மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் சிங்களவர் ஒருவரது உந்துருளி முஸ்லிம் ஒருவரை மோதியதை அடுத்து இந்த வன்முறைகள் ஆரம்பித்ததாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, முஸ்லிம்கள் சிலர் உந்துருளியைச் செலுத்திய சிங்களவரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர், தாக்கப்பட்ட சிங்களவர் ஒரு குழுவினருடன் வந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இரண்டு சமூகங்களுக்கிடையிலும் பெரும் மோதல் வெடித்தது.

இதையடுத்து, கலகம் அடக்கும் காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க, கண்ணீர் புகைக்குண்டுகளை அதிரடிப்படையினர் பயன்படுத்தியுள்ளனர்.

ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. பல வீடுகளும், கடைகளும் தீயிடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 200 காவல்துறையினரும், 1000 சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த மோதல்களில் காயமடைந்த 3 பேர், காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வன்முறைகளை அடுத்து ஜின்தோட்டை பகுதியில் நேற்றிரவு காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை 9 மணிவரை ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிபிட்டிமோதற, மகாஹப்புகல, ருக்வத்த, ஜின்தோட்டை கிழக்கு, ஜின்தோட்டை மேற்கு, பியந்திகம, குருந்துவத்த உள்ளிட்ட பகுதிகளிலேயே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!