உலகிலேயே அதிக எடை கொண்ட இந்திய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை..!


உலகிலேயே அதிக எடை கொண்ட டெல்லி சிறுவனுக்கு, ஆபரேசன் மற்றும் தொடர் சிகிச்சை காரணமாக 3 மாதத்தில் 60 கிலோ எடை குறைந்துள்ளது.

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள உத்தர்நகரில் வசிக்கும் பூஜா ஜெயின் என்பவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு மிகிர் ஜெயின் என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர்.

பிறக்கும் போது மிகிர் ஜெயின் சுமார் 2.5 கிலோ எடையே இருந்தான். ஆனால் மாதங்கள் செல்ல செல்ல… மிகிர் ஜெயினின் உடல் எடை கணிசமாக அதிகரித்தது.

தங்களது முன்னோர்கள் அனைவரும் குண்டாக இருப்பதால், தனது மகனும் குண்டாக வளர்வதாக முதலில் பூஜா நினைத்தார். ஆனால் மிகிரின் ஒரு வயதுக்குப் பிறகு அவனது உடல் எடை பிரமிப்பூட்டும் வகையில் அதிகரித்தது.

மிகிர் 5 வயதை எட்டிய போது அவனது உடல் எடை 70 கிலோவை தொட்டு விட்டது. அனைவரும் மிகிர் ஜெயினை ஆச்சரியத்தோடு பார்க்கத் தொடங்கினார்கள்.

மிகிரை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தபோது மற்ற மாணவர்கள் அவனை சற்று மிரட்சியுடன் பார்த்தனர். 2009-ல் அவன் இரண்டாம் வகுப்புக்கு சென்றபோது அவனது உடல் எடை 100 கிலோவைத் தாண்டி விட்டது.

அவனைப் பார்த்த அனைவரும் “குண்டு பையன்” என்று கேலியும் கிண்டலும் செய்தனர். என்றாலும் சராசரி மனித உடலையும் தாண்டிய நிலையில் மிகிர் கஷ்டப்பட்டு இரண்டாம் வகுப்புக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவன் உடல் எடை 125 கிலோவாக உயர்ந்தது. அவனால் 2 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவன் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினான்.

அவனுக்கு தாய் பூஜா வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுத்தார். அதோடு மகனின் உடல் எடையை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

2010-ம் ஆண்டு முதன் முதலாக மிகிர்ஜெயினை டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பார்த்த டாக்டர் பிரதீப் கடும் அதிர்ச்சி அடைந்தார். உலக அளவில் குண்டாக இருக்கும் சிறுவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்தார்.

அப்போது மிகிர் 7 வயதில் 150 கிலோ எடையுடன் உலகிலேயே மிக, மிக அதிக உடல் எடை கொண்டவராக முதல் இடத்தில் இருப்பது தெரிய வந்தது. அவரது உடல் எடை சாதனை பட்டியலிலும் இடம் பிடித்தது.

இதற்கிடையே அவனது உயரமும் அதிகரித்தது. இதையடுத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சிறு வயது என்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 14-வது வயதை பூர்த்தி செய்த மிகிர்ஜெயின் 5 அடி 3 இஞ்ச் உயரத்துக்கு வளர்ந்திருந்தான். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவனது உடல் எடை 237 கிலோவுக்கு உயர்ந்திருந்தது. இனியும் விட்டால் 300 கிலோவுக்கு போய் விடுவான் என்று டாக்டர்கள் பயப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மிகிருக்கு கடந்த ஏப்ரல் மாதம் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பயனாக அவனது உடல் எடை கட்டுப்பட்டது. அதோடு உடல் எடையும் குறைந்தது.

மிக குறுகிய காலத்துக்குள் அவனது உடல் எடையில் 60 கிலோ குறைந்துள்ளது. தற்போது மிகிர் ஜெயின் 177 கிலோ உடல் எடையுடன் இருக்கிறான்.

கொஞ்சம், கொஞ்சமாக அவனது உடல் எடையை குறைத்து விட முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மிகிரின் உடல் எடையை 100 கிலோ குறைத்து 77 கிலோவுக்கு கொண்டு வந்து விட டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!