ஜாதி சான்றிதழ் ட்வீட் – மகளின் பேட்டியை முன்வைத்து கமலை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்..!


தனது மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிடவில்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தற்கு, அவரது மகள் ஸ்ருதியின் பழைய பேட்டி ஒன்றை முன்வைத்து நெட்டிசன்கள் கமலை விமர்சித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்து ட்வீட் செய்தார். சாதியை ஒழிக்க என்ன யோசனையை முன்னெடுக்கின்றீர்கள்? என ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து ட்வீட் செய்த அவர், “எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கான விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுத்தேன். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை எடுத்துச் செல்லாமல் தவிர்க்க இதுவே வழி. அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!