உலகக் கோப்பை வரலாற்றில் முதன் முதலாக ஜெர்மனிக்கு நடந்த பரிதாப நிலை..!


2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியன் அணி ஜெர்மனி. ஆனால், இந்த உலக் கோப்பையில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்த லீக் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல் முறை.

உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெறும் மிக முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் கொரியாவிடம் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அத்துடன், எஃப்’ பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது, உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியுள்ளது ஜெர்மனி.

கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுவென சென்றது. இரு அணிகளும் போட்டியின் முழு நேரம் வரையிலும் கோல் அடிக்கவில்லை. இதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா முழு பலத்துடன் மோதி 2 கோல்களை அடித்தது.

உலகக் கோப்பை வரலாற்றில், நடப்பு சாம்பியன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போவது இது 6-ஆவது முறையாகும். நடப்பு சாம்பியன்கள் அடுத்த உலகக் கோப்பையில் பரிதாபமாக தோற்பது இந்தாண்டும் தொடர்கிறது.-Source: PUTHIYATHALAIMURAI

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!