இறந்த மூதாட்டியின் தலையணைக்கு அடியிலிருந்த பொருளைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில்…!


பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்பதை அறியாமல் இறுதி சடங்கிற்காக மூதாட்டி ரூ.35 ஆயிரம் சேமித்து வைத்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இதை அறியாமல் தனது இறுதி சடங்கிற்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை தலையணைக்கு அடியில் வைத்திருந்த மூதாட்டி இறந்து விட்டார். அந்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவிக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யம் பெருமாள். இவரது மனைவி லட்சுமி (வயது 74). சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பெருமாள் இறந்து விட்டார்.


அதன் பிறகு லட்சுமி, தனது தம்பியான முத்துசாமியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து முத்துசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் லட்சுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இறந்த லட்சுமி பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக எடுத்தனர்.

அப்போது அவரது தலையணைக்கு அடியில் கடந்த ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் இருந்தது. அதை எடுத்து எண்ணிப்பார்த்தபோது, அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து லட்சுமியின் தம்பி முத்துசாமி கூறியதாவது:-

எனது அக்காவுக்கு தமிழக அரசு மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அதனை அவரே வாங்கி, செலவு செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், நான் இறந்த பிறகு இறுதி சடங்கு செய்வதற்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்று என்னிடம் கூறினார்.


அப்போது நான், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது எனக்கு அவர் முதியோர் உதவித்தொகையை சேமித்து வைத்திருப்பார் என்று தோன்றவில்லை.

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறியாத எனது அக்காள் தான் வைத்திருந்த ரூ.500 நோட்டுகளை மாற்றாமலும், தன்னிடம் சேமித்து வைத்துள்ள பணம் பற்றிய எந்த தகவலையும் எங்களிடம் தெரிவிக்காமல் விட்டு விட்டார்.

அவர் இறந்த பிறகு அவரது தலையணையை எடுத்தபோது தான், அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது தெரிந்தது. தற்போது இந்த செல்லாத நோட்டுகளை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!