ஏமாற்றிய காதலியை சரமாரியாக குத்திக் கிழித்த காதலன்! சென்னையில் பரபரப்பு…!


காதல் செய்து ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கல்லூரி மாணவியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் பிணு. இவரது மகன் கவியரசன்(22).

இவர் படித்து முடித்து விட்டு மீஞ்சூர் அருகே உள்ள ஒரு அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சொர்ணலட்சுமி (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்ற கல்லூரி மாணவியுடன் கவியரசனுக்கு நட்பு ஏற்பட்டது.

நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் சென்னையில் பல இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், சொர்ணலட்சுமி கடந்த சில நாட்களாக, கவியரசனிடம் பேசாமல், அவரை விட்டு விலகி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த கவியரசன், சொர்ணலட்சுமியின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்தார். அப்போது, சொர்ணலட்சுமி, அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சக மாணவர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவது தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த கவியரசன் முதலில் அந்த மாணவனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அந்த மாணவன், சொர்ணலட்சுமியும் தன்னை காதலிக்கிறார் என கூறி பதிலுக்கு அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடனே கவியரசன், அந்த மாணவனின் செல்போனை வாங்கி சொர்ணலட்சுமிக்கு போன் செய்து, லவுட் பீக்கரில் போட்டு அந்த மாணவனை பேச சொன்னார். அப்போது, அவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதை தெரிந்து கொண்ட கவியரசன் ஆத்திரத்தில், சிறிது நேரம் கழித்து சொர்ணலட்சுமிக்கு போன் செய்து, நான் உன்னிடம் பேச வேண்டும்.

நீ கத்திவாக்கம் ரயில் நிலையத்திற்கு வா என்று அழைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று இருவரும் கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, கவியரசன் இன்னொரு வாலிபரிடம் பழகுவதை ஏன் என்று சொர்ணலட்சுமியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றவே, கவியரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சொர்ண லட்சுமியின் முகம், நெஞ்சு, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினான்.

இதில் படுகாயம் அடைந்த சொர்ணலட்சுமி மயங்கி கீழே விழுந்தார். இருந்தபோதும் சொர்ணலட்சுமியை அங்கேயே விட்டு செல்லாமல், உடனே கவியரசன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ‘எனது அத்தை மகளை ஒரு திருடன் கத்தியால் குத்திவிட்டு அவரது செல்போனை பறித்து சென்றதாக பொய் கூறி விட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சொர்ணலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்த நிலையில், தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாஸ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவியரசனிடம் விசாரணை நடத்தினார். ஆனால், சம்பவ நடந்த இடம் எண்ணூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதால் சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின் போது, கவியரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் கவியரசனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பயத்தில் நடந்த சம்பவத்தை கவியரசன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, கவியரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!