மேலை நாட்டினரையும் சுண்டி இழுத்த தமிழக பல்கலைக்கழகம்… காரணம் என்ன?


சமண சமயம் தான் நமது தமிழ் மொழியின் முதன்மை எழுத்தான பிராமி எழுத்துக்களை அதிகம் உபயோகித்தது. அது சமண சமயத்தையும் தமிழையும் ஒரு சேர வளர்த்தது என்றும் சொல்லலாம்.

அந்த சமணர்களின் கல்லூரியாகவும், பல்கலைக் கழகமாகவும் திகழ்ந்த இடம், மதுரைக்கு மேற்குப் பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டை என்ற ஊரில் அமைந்திருக்கும் சமணர் மலை. இந்த மலை துவக்க காலத்தில், பெரும் வணக வழிப் பெரும் பாதையாக இருந்திருக்கிறது. இங்கு தான் வணிகர்கள் தங்கியிருந்தனர்.

இந்த மலையை அடையாளம் கண்டு தான் தங்களது பயணத்திற்கான பாதைகளை அமைத்தார்கள். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பராந்தக வீர நாராயணன் தனது மனைவியான வானவன் மாதேவியின் பெயரால் இந்த மலையில் உள்ள சமணர் பள்ளியை உருவாக்கினார்.

அதனால் இப் பகுதி மாதேவிப் பெரும் பள்ளி என்று அழைக்கப் பட்டது. சங்க காலத்திற்கப் பிறகு திகம்பரப் பிரிவைச் சேர்ந்த சமணர்கள் இங்குள்ள குகைத் தளங்களில் வாழ்ந்துள்ளனர். கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்தப் பள்ளி பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மலையின் நடுப் பகுதியில் பேச்சிப் பள்ளம் என்ற இடத்தில் இயற்கையான நீர் ஊற்று இருக்கிறது.

இந்த ஊற்றுக்கு மேலே சமணத் தீர்த்தங்கரர்கள் ஏழு பேரின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. பாகுபலி, பார்சுவநாதர், முக்குடை நாதர் போன்றவர்களின் சிற்பங்கள் ஒவ்வோன்றும் வௌவேறு கால கட்டங்களில் செய்விக்கப் பட்டுள்ளன. இவற்றைச் செய்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகப் பொறிக்கப் பட்டுள்ளன.

அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கு நல்ல படிக்கட்டுப் பாதைகள் உருவாக்கப் பட்டுள்ளன. மலையின் நடுப் பகுதியான பேச்சிப் பள்ளத்தை அடைந்ததும் அங்கு தென்படும் இந்தச் சிற்ப வரிசைகள் அந்த சூழ்நிலையின் ரம்மியத்திற்கு அழகூட்டுகின்றன. இந்த இடத்திற்கு சற்று மேலே சிதைந்த நிலையிலான கட்டிடத்தின் அடிப்பாகம் மட்டும் காணக் கிடைக்கிறது.

இது தான் மாதேவிப் பெரும்பள்ளியாக இருந்த கட்டிடம். முற்காலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்ற சமணர்களின் கல்லூரியாக இருந்துள்ளது. பின்னாளில் இது சமண சமயத்தின் பல்கலைக் கழகமாகவே இருந்திருக்கிறது.


அதனால், கர்நாடக மாநிலம் சிரவணபௌகோலாவிலிருந்து பெருமளவில் சமண சமயத்தைக் கற்கும் மாணவர் நூற்றுக் கணக்கில், இங்கு வந்து பயின்றிருக்கிறார்கள். இதற்கு சற்று வடக்குப் பகுதியில் தான் இங்கு வாழ்ந்த சமணர்களுக்காக உருவாக்கப்பட்ட கற்படுக்கைகள் இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இடி மின்னல் தாக்கியதால் அந்தப் பகுதி முழுவதும் உடைந்து சரிந்து விட்டது. இந்த மலையில் இருந்த இரண்டு சிலைகள் மலை அடிவாரத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் வைக்கப் பட்டு, பாண்டியன், உக்கிர பாண்டியன் என்ற பெயரில் இப்பகுதி மக்களால் வழிபடப் பட்டு வருகிறது.

இந்த இரண்டு சிலைகளும் மிக அரிதானவை! மேலும் அக்காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்களின் தோற்றம், அவர்கள் அணிந்த அணிகலன்கள் என்னென்ன போன்ற விபரங்களைக் கண்கூடாகக் காண முடிகிறது.

தலை மேல் கரண்ட மகுடம், காதுகளில் வட்டமான பத்திர குண்டலங்கள், மார்பில் முப்புரி நூல், வயிற்றுப் பகுதியில் ரத்தினம் பதித்த உகர பந்தம் என பாண்டிய மன்னர்கிள் அங்க அடையாளங்களை அறிய உதவும் அற்புதப் பெட்டகமாக இந்த சிலைகள் விளங்குகின்றன.

இந்த மலையின் தெற்குப் பகுதியில் உள்ள இயற்கையான குகைத் தளத்திலும் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இக் குகைப் பகதியைச் செட்டிப்புடவு என்று அழைக்கிறார்கள். இந்தக் குகைத் தளத்தின் மேலே 8 அடி உயரமுள்ள முக்குடைநாதர் என்ற தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் பிரம்மாண்டமாகத் தோற்றம் அளிக்கிறது.

இந்தத் திருமேனி கி.பி.10-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டுள்ளது. குகையின் உட்புறத்தில் மேலே குடை போன்ற வடிவத்தில் உள்ள விதானத்தில் சமணர்களின் பெண் தெய்வமான இயக்கி அம்பிகா தனது வாகனமான சிங்கத்தின் மீது அமர்ந்து, தனது எட்டுக் கரங்களில் எட்டு விதமான ஆயுதங்களுடன் தனது எதிரியை வீழ்த்த போர் புரியும் காட்சியை மிக அற்புதமாக கல்லில் செதுக்கியிருக்கிறார்கள்.

அருகிலேயே தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் செதுக்கப் பட்டுள்ளன. மலையின் முன்பாக உள்ள தாமரைத் தடாகம் இந்த மலைக் கவிதைக்கு சூட்டப் பட்ட மலர் மாலையாகத் தான் தோன்றுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!