48 வயது பெண்ணின் உயிரை காப்பாற்றிய பிஞ்சுக் குழந்தை – ஒரு தாயின் நெகிழ்ச்சிக் கதை..!


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு 3 கிலோவுக்கும் குறைவான எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

அதே நேரத்தில் அங்கு 48 வயது பெண் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழந்து போய் ‘டயாலிசிஸ்’ செய்து வந்தார். அவர் உயிர் பிழைப்பதற்காக மாற்று சிறுநீரகத்துக்காக காத்து இருந்தார்.

இதுபற்றி இறந்து போன குழந்தையின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மரணத்துக்கு பின்னரும் தங்கள் குழந்தை என்றென்றும் நினைவில் இருக்கத்தக்க வகையில் ஒரு உறுதியான முடிவை, துயரமான தருணத்திலும் எடுத்தனர்.

தங்கள் மகளின் சிறுநீரகங்களை அந்த 48 வயது பெண்ணுக்கு தானம் செய்ய முடிவு எடுத்தனர். அதைத் தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுவிட்டன. அவர் இப்போது இயல்பான வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்.

செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி என்பது போல அந்த குழந்தை தனது இறப்பின் மூலம் ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து இருக்கிறது.

இதுபற்றி தேசிய உறுப்பு மாற்று குழுவின் தலைவர் டாக்டர் அலி அப்துல் கரீம் அல் ஒபைத்லி கூறும்போது, “அந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் இறந்து போன மகள் மாறுபட்டவளாக இருக்க வேண்டும் என்று விரும்பினர், அதை செய்து உள்ளனர்” என குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிக குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த சாதனையாளராக மரணத்துக்கு பின்னர் அந்த குழந்தை திகழ்கிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!