இரவு ஆட்டோவுல தூங்கியவர் காலையில் சடலமாக மீட்பு… பின்ணனியில் அதிர்ச்சி!


`உலகத்தில் ஒரே மாதிரி தோற்றத்தில் நிறையபேர் இருப்பார்கள்’ என்பார்கள். இப்போது தமிழ்நாட்டில் ஒரே மாதிரி விபத்துகள் நிறைய நிகழ்கின்றன. இதில் விபத்து நடக்கும் இடம்கூட மாறவில்லை என்பதுதான் ஷாக்கான விஷயம்.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலை அருகே குடிபோதையில் கார் ஓட்டி வந்த விகேஷ் விஜயானந்த் என்பவர், பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களின் மீது தாறுமாறாக தனது போர்ஷே காரை ஏற்றி பார்க்கிங் செய்தார்.

அதற்குப் பிறகு, ரேஸர் அஷ்வின் சுந்தரின் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று, சாந்தோம் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தனது மனைவியுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இப்போது, அதே ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று இரவு குடிபோதையில் கார் ஓட்டி வந்த மாணவர்கள், ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோக்கள் மீது முட்டி மோதியதில் ஆட்டோ டிரைவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒருவர் கால் உடைந்து பரிதாப நிலையில் இருக்கிறார். மூவர் தலையில் காயம், இடுப்பில் அடி என தீவிர சிகிச்சையில் உயிருக்குப் போராடிவருகிறார்கள். உச்சகட்டமாக, ராஜேஷ் என்கிற ஆட்டோ டிரைவர் தூக்கத்திலேயே விபத்துக்குள்ளாகி, பரிதாபமான நிலையில் நசுங்கி இறந்தார்.

நேற்று அதிகாலை 1:20 மணிக்கு, சென்னை ஜெமினி மேம்பாலத்துக்குக் கீழே தாறுமாறாக வந்த அந்த செவர்லே க்ரூஸ் காரை, போலீஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். காருக்குள்ளே நான்கு நண்பர்கள் புடைசூழ, நவீன் அஹ்மத் என்கிற 20 வயதுடைய கல்லூரி மாணவர்தான் காரை ஓட்டிவந்தார்.


அப்போதுதான் சரக்கு பார்ட்டியை முடித்து வந்த அவர்கள், போலீஸ் செக்கிங்கில் சிக்காமல் தப்பிக்க நினைத்தார்களோ என்னவோ, க்ரூஸை இன்னும் வேகமாக ஓட்டினார் அஹ்மத். செடான் கார்களில் அதிகபட்ச பவரைக்கொண்டது செவர்லே க்ரூஸ் கார். 164 குதிரைசக்திகள். சாதாரணமாக மிதித்தாலே பறக்கும்.

செக்கிங்கிலிருந்து தப்பித்து, அமெரிக்கத் தூதரகத்தைத் தாண்டி இன்னும் வேகமாகப் பறந்த அந்த கார், சிறிது தூரம் சென்றதும் கன்ட்ரோல் இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோக்களின் மீது பலமாக மோதியது. இதில் மூன்று ஆட்டோ டிரைவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

1,500 கிலோ எடைகொண்ட கார் மோதியதில், ஆட்டோவுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ராஜேஷ், உள்ளேயே நசுங்கி இறந்தார். ராஜேஷ் குடும்பத்துக்குத் தகவல் தெரிந்து, அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்துபோயின. பேசவே முடியாமல் இருந்தார் ராஜேஷின் மனைவி காயத்ரி. காயத்ரியின் தந்தைதான் நம்மிடம் பேசினார்.

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. காயத்ரிதான் ரொம்பச் செல்லம். அவளுக்குக் கல்யாணப் பேச்சு எடுத்தப்போ, ரொம்ப விசாரிச்சுதான் என் மருமகனைத் தேர்ந்தெடுத்தேன். அவருக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. தினமும் 300-ல் இருந்து 400 ரூபா வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பாரு.

`இவர் கிடைக்க, நான் குடுத்துவெச்சிருக்கணும்ப்பா’னு என் பொண்ணு சொன்னப்போ, வாழ்க்கையே ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. ஏழைங்க நிம்மதியா இருந்தா ஆண்டவனுக்குப் பிடிக்காதுபோல! அவர் சம்பாத்தியத்தை வெச்சுத்தான் என் ரெண்டு பேரப் பிள்ளைங்களையும் என் பொண்ணையும் கண்கலங்காமப் பார்த்துக்கிட்டு வந்தாரு.

இப்போ என் பொண்ணு கண்கலங்கி நிக்கிறதை என்னால பார்க்க முடியலைங்க! அவளை யார் காப்பாத்துவா? என் பேரப் பசங்க என்ன தப்புப் பண்ணினாங்க? என் வாரச் சம்பளத்தை வெச்சு அவங்களை எப்படிக் காப்பாத்தப்போறேன்?’’ என்று இழப்பிலும் வறுமை அவரைக் கதறவைத்தது.


ராஜேஷின் வீடு அமைந்திருக்கும் அரக்கோணத்தில் உள்ள பரமேஸ்மங்கலம் எனும் கிராமத்திலிருந்து சென்னை நகரத்தில் கிட்டத்தட்ட 1,500 பேர் ஆட்டோ ஓட்டுநர்களாகத் தொழில் புரிகிறார்கள். அதில் ராஜேஷும் ஒருவர். `லேட் நைட் சவாரி’ என்றால், திரும்பவும் ஆட்டோவில் வீட்டுக்குப் போய், மறுபடியும் மறுநாள் கிளம்பி வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.

பெட்ரோல் செலவு; போலீஸ் தொந்தரவு எனச் சில விஷயங்களைத் தவிர்ப்பதற்காக, ஆட்டோவிலேயே தூங்குவது டிரைவர்களுக்கு வாடிக்கையான விஷயம். “பொதுவா, என் மாப்பிள்ளை எக்மோர் பேபி ஹாஸ்பிட்டல், சென்ட்ரல், புரசைவாக்கத்துல தூங்குறதுதான் வழக்கம். என் பொண்ணுகிட்ட 12:00 மணிக்கு போன் பேசியிருக்காரு.

`ஆர்.கே மடம் சாலையில் டிராப்; எக்மோர்ல ரொம்பக் கொசு கடிக்குது. இது வி.ஐ.பி ஏரியா… இங்கேயே படுத்துட்டு நாளைக்கு வர்றேன்’னு போன்ல சொல்லிட்டுப் படுத்திருக்காரு. இப்படிப் பொணமா வருவார்னு எதிர்பார்க்கலை!’’ என்று அழுதார் சம்பத், ராஜேஷின் மாமனார்.

எழும்பூர், சென்ட்ரல் போன்ற ஏரியாக்களில் மிட்நைட் சவாரிகள் கிடைக்கும் என்றாலும், ஆட்டோக்காரர்களுக்குப் பெரும்பான்மையான தொந்தரவுகளாக இருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று – கொசுக்கடி; இரண்டு – ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்கள் திருடுபோவது. இறப்பதற்கு முந்தைய நாள் தனது மனைவியிடம், “இது வி.ஐ.பி-ங்க ஏரியா. போலீஸ்காரங்க இருப்பாங்க.

ஆட்டோவும் சேஃப்டியா இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் விதி, குடிகாரர்கள் வழியில் விளையாடிவிட்டது. சம்பவ இடத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரே தரைமட்டமாகியிருந்தது என்றால், அவர்கள் வந்த வேகம் என்ன என்பதைக் கணிக்க முடியவில்லை. சாலையை ரேஸ் ட்ராக் ஆக்கி, குடித்துவிட்டு கார் ஓட்டி வந்த மாணவர்களுக்கு எந்தக் காயமும் இல்லை.

அதேநேரம், கார் ஓட்டியவர்களின் விளையாட்டுத்தனத்தால், நான்கு நடுத்தரக் குடும்பங்கள் நிர்கதியாக அழுவதில் உள்ள சோகத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை. “என்ன பண்றது… எல்லாம் விதி!’’ என்று விடியலை நோக்கிப் படுத்திருந்த ராஜேஷின் மரணத்தை ஒதுக்கிவிட முடியாது. விதியை வைத்து அடுத்தவர்கள் வாழ்வில் விளையாடுவது பெரிய சதி என்பதை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!