கிருஷ்ணபிரியா – வருமான வரி சோதனையில் அரசியல் இல்லை…!


வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடப்பது என்பது வழக்கமானது தான். இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கூறினார்.

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்திய வருமான வரி அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்காக சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் “சம்மன்” அனுப்பினார்கள். அந்த சம்மனை ஏற்று முதலில் இளவரசியின் மகன் விவேக், டாக்டர் சிவகுமார், பூங்குன்றன் ஆகிய மூன்று பேரும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார்கள்.

அவர்களிடம் அதிகாரிகள் 187 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து கேள்விகள் எழுப்பினார்கள். இதையடுத்து நேற்று ஜாஸ் சினிமாஸ் நிறுவனத் தின் 3 உயர் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸ், எப்படி சசிகலா குடும்பத்துக்கு கை மாறியது என்று விசாரித்தனர்.

அவர்கள் கொடுத்த தகவல்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மூன்றாவது நாளான இன்று இளவரசியின் 2 மகள்கள் மற்றும் ஜெயா டி.வி. மானேஜர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ‌ஷகீலா, ஜெயா டி.வி. மானேஜர் நடராஜன் இன்று ஆஜரானார்கள்.


அவர்கள் மூவரிடமும் நீண்ட நேரம் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகளின் 5 நாள் சோதனையில் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும், விவேக் வீட்டிலும் தான் அதிகப்படியான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான அந்த ஆவணங்களில் சொத்துகள் வாங்கப்பட்டிருப்பது, நிறுவனங்கள் தொடங்கியது போன்ற தகவல்கள் இருந்தன.

அந்த ஆவணங்களை காண்பித்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். சசிகலா குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்வதற்காகவே சுமார் 60 போலி நிறுவனங்களை தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த போலி நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கிருஷ்ணப்பிரியா கட்டுப்பாட்டில் நடந்ததாக தெரிகிறது.

இதை உறுதிபடுத்த அதிகாரிகள் இன்று விசாரணை செய்தனர். இளவரசியின் மற்றொரு மகள் ‌ஷகீலாவிடமும் இதே மாதிரியான விசாரணையை நடத்தினார்கள். விசாரணை முடிந்து 12.40 மணிக்கு கிருஷ்ணப்பிரியா வெளியில் வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடப்பது என்பது வழக்கமானது தான். இதில் எந்தவித அரசியலும் இல்லை. எனது வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. எனது சொத்து கணக்கை காட்டுவதற்காகவே இன்று வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தேன்.

வருமான வரித்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஜெயா டி.வி. மானேஜர் நடராஜனும் விசாரணைக்கு ஆஜரானார். ஜெயா டி.வி. அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல்வேறு சந்தேகங்கள் அதிகாரிகளுக்கு இருந்தன.

அதை நிவர்த்தி செய்யும் வகையில் இன்றைய விசாரணை நடந்தது. அடுத்தகட்டமாக மீண்டும் இளவரசி மகன் விவேக்கை அழைத்து விசாரிக்க உள்ளனர். விசாரணையில் இளவரசியின் மகன், மகள்கள் கொடுக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!