ஏழரைச்சனி பற்றி பாரம்பரிய ஜோதிடம் சொல்லும் உண்மைகள்..!


ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. ஏழரைச்சனி தரும் அவஸ்தைகளை அறிந்து கொள்ளலாம்.

ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் ஏழரைச் சனி அமைப்பு சில நிலைகளில் ஒரு மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.

இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாய் என்று சொல்லப்படக் கூடிய பாரம்பரிய ஜோதிட முறையானது மிகப் பெரிய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த முறையில் ஒரு மனிதனின் எதிர்காலத்தை அறிவதற்கு அவனது ஜாதகத்தில் லக்னம், ராசி எனப்படும் இரு முக்கிய அமைப்புகளையும் ஒரு சேரக் கணிக்க வேண்டும்.

வேத ஜோதிடம் லக்னம், ராசி எனும் இரு சக்கரங்களைக் கொண்டது. இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் வண்டி நகராது. ஒரு மனிதனின் எதிர்காலம் என்பது மாறாத பிறந்த ஜாதகத்தின் லக்னத்தையும், மாறிக் கொண்டே இருக்கும் கோட்சார நிலையின் மூல அமைப்பான ராசியையும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த நாளன்று, வானில் இருந்த கோள்களின் நிலைதான். இது மாறவே மாறாத ஒன்று. கோட்சாரம் எனப்படுவது மாறிக் கொண்டே இருக்கும் தற்போதைய வான் கிரக நிலையைச் சொல்லுவது. மாறாத பிறந்த ஜாதகத்தையும், மாறிக்கொண்டே இருக்கும் கோட்சார நிலைகளையும் இணைத்துதான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாக அறிய முடியும். இதுவே ஒரு சுவையான முரண்பாடுதான்.

பாபக் கோள்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை நமது ராசிக்கு பார்வை, இணைவு எனும் தொடர்பைப் பெறும்போது எதிர்மறைச் சக்திகள் தூண்டப்பட்டு மனம் செயலிழக்கிறது. இந்த அமைப்பினால் அந்தக் காலகட்ட வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து தோல்விகளைச் சந்திக்கிறோம்.
இதில் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் இருக்கக் கூடிய, மிக மெதுவாக நகரும் தன்மை கொண்ட பாபக் கோளான சனி, ஒரு மனிதனின் ராசிக்கு முன்பின் இடங்களான 12, 2 மற்றும் அவனது ராசியில் இருக்கும் ஏழரை ஆண்டு காலமே ஏழரைச்சனி என்று குறிப்பிடப்படுகிறது.

மனம் என்பது ஒருவருக்கு வயதுக்கு ஏற்றபடிதான் செயல்படும். இருபது வயதில் உங்களுக்கு முக்கியமாகப் படுகின்ற ஒரு விஷயம் ஐம்பது வயதில் சாதாரணமாகத் தெரியும். சனி ராசியை இருளாக்கி ஆக்கிரமிக்கும் போது ஒருவரின் மனம் அழுத்தம் தரும் சம்பவங்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் இருபது வயதுகளில் ஏழரைச்சனி நடக்கும்போது ஒருவர், இளம்வயதிற்கே உரிய காதல், படிப்பு போன்றவைகளில் மன அழுத்தத்தை அடைகிறார்.
இதுவே முப்பது வயதுகளில் இருப்பவருக்கு திருமணம், குழந்தை போன்றவைகளிலும், நாற்பதுகளில் உள்ளவருக்கு அந்த வயதிற்கே உரிய வேலை, தொழில் போன்றவைகளிலும் சங்கடங்கள் நிகழ்கின்றன.


ஜோதிடத்தை ஆய்வு நோக்கோடு பார்க்க விரும்புபவர்கள் மற்றும் இந்த மாபெரும் கலையை மறுக்கின்ற பகுத்தறிவாளர்கள் அனைவருமே உலகில் பிறக்கும் மனிதர்களின் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களை நடுநிலையோடு ஆராயும்போது நிச்சயமாக அவர்களுக்கும் உண்மை புலப்பட்டே தீரும்.

உண்மையில் கடுமையான ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஒரு மனிதனின் ஜாதகம் எத்தனை பெரிய யோகமான அமைப்பில் இருந்தாலும் செயலற்றுப் போய்விடும்

ஏழரைச்சனி பற்றி பாரம்பரிய ஜோதிடத்தில் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. ஒரு தகப்பன் அல்லது குடும்பத் தலைவனின் நேரம் நன்றாக இருந்தாலும், அவனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு கடுமையான ஜென்மச்சனி நடப்பில் இருக்கும் போது அந்தக் குடும்பத்தில் கெடுபலன்கள் நடக்கின்றன.

குறிப்பாக குடும்பத் தலைவனின் தொழில் மற்றும் வேலைகளில் சிக்கல்கள் உண்டாகி, அவனை பொருளாதார சிக்கல்களில் சிக்க வைத்து கடன், நோய் போன்ற சிரமங்களைத் தருகின்றன. இதை நான் அடிக்கடி எனது மாணவர்களுக்கு சொல்லுகிறேன்.

குடும்பம் என்பது ஒரே உயிர் போன்றது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்ற குடும்பத்தில் ஒருவருக்கு நடக்கும் கெடுபலன் இன்னொருவரை பாதிக்கவே செய்யும். ஆகவே ஜோதிடப்படி ஒருவருக்கு துல்லியமான பலன் சொல்ல வேண்டும் என்றால், குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் எவருக்காவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும்.

பலர் ஒருவருடைய வாழ்க்கையில் வரும் ஏழரைச்சனியே கடுமையான கஷ்டங்களைத் தரும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நமது மூல நூல்களில் அஷ்டமச் சனியே, ஒருவருக்கு மிகப்பெரிய கஷ்டங்களைத் தரும் என்றும், ஏழரைச்சனி அதற்குக் குறைவான கெடுபலன்களைத் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில் அஷ்டமச்சனியே நெருங்கிய உறவினர் மரணம், கடுமையான இழப்பு போன்ற கெடுதல்களை அதிகம் தருகிறது.

ஒருவருக்கு கடுமையான ஜென்மச் சனி மற்றும் அஷ்டமச்சனி நடக்கும்போது, மற்ற எந்தக் கிரகப் பெயர்ச்சியும் பலன் தராது, சனியின் கொடுமைகள் மட்டுமே முன் நிற்கும். சனியின் ஆதிக்கத்தின் முன் மற்ற கிரகங்கள் சாதகமான இடத்தில் இருந்தாலும் பலன் தராது.

கடுமையான ஜென்மச் சனி, அஷ்டமச் சனி காலங்களில் ஒருவருக்கு சனியின் எதிர்மறை ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கும். அந்த மனிதர் எத்தகைய ராஜயோக ஜாதகத்தைக் கொண்டிருந்தாலும் அது பலன் தராது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!